சுழியோடியாக மாறிய கிழக்கு சுற்றுலா பணியக தலைவர் மதன்: கடலின் கீழுள்ள கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார்

🕔 July 24, 2023

திருகோணமலை சுற்றுலா பிரதேசங்களில் – கடலி கீழ் குவிந்துள்ள மாசுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று இன்று (24) மேற்கொள்ளப்பட்ட போது, கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஏ.பி. மதனும் அந்தப் பணியில் ஒரு சுழியோடியாக மாறி இணைந்து கொண்டார்.

சுற்றுலாத் துறைக்கு சேதம் விளைவிக்கும் மாசுப்பொருட்கள் தொடர்பில், திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் (Trincomalee District Hotels Association) மற்றும் டச் பே நீர் விளையாட்டு கழகம் (Dutch Bay Water Sports Club) ஆகியவை கடந்த வாரம் தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தன.

இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலுக்கமைவாக, கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் அனுசரணையுடன் – டச் பே நீர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், கடலுக்கடியிலுள்ள கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பி. மதனும் சுழியோடியாக மாறி, கடலுக்கடியில் சென்று கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கையில் இணைந்து கொண்டார்.

நீருக்கடியிலுள்ள உலகின் அழகை தனக்குக் காணக் கிடைத்ததாகவும், இவ்வளவு அழகான சாம்ராஜியத்தை மனிதகுலத்தின் சுயநலம் எப்படி அழித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தபோது தனது நெஞ்சம் உடைந்து போனதாகவும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பி. மதன் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்