சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் வருகிறது: எரிபொருள் ராஜாங்க அமைச்சர் தகவல்

🕔 July 23, 2023

சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்தார்.

அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான வகையில் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி எரிபொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட ராஜாங்க அமைச்சர், நாட்டிற்கு நன்மை கிடைக்கும் வகையில் போட்டித்தன்மை கொண்ட எரிபொருள் விநியோகத்தை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் கூறினார்.

அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் QR குறியீடு தொடர்பான முடிவு எடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இ்ந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;

”நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அதிக பிரச்சினைகளை எதிர்கொண்ட அமைச்சுக்களில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பிரதானமானது. அன்று நீண்ட எரிபொருள் வரிசை இருந்தது. அந்த கடினமான காலத்தை கடந்து வந்திருக்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர், எரிபொருள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான சவாலை அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொறுப்பேற்றார்.

அந்த சமயம் நாட்டில் டொலர்கள் இருக்கவில்லை. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட 28 எரிபொருள் விநியோகஸ்தர்களில் இருவர் மாத்திரமே இலங்கைக்கு எண்ணெய் வழங்க முன்வந்திருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான பொருளாதாரக் கொள்கையினால் நாட்டின் டொலர் கையிருப்பு வழமைக்கு திரும்ப ஆரம்பித்தது. மறுபுறம், அமைச்சர் காஞ்சனாவின் நிர்வாகக் கொள்கையின் அடிப்படையில், QR குறியீட்டின் ஊடாக, நாட்டில் கிடைக்கும் டொலர்களுக்கு ஏற்ப எரிபொருள் விநியோகிக்கப்பட்டது. QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு, எரிபொருள் வரிசைகள் முடிவடைய ஆரம்பித்தன. QR குறியீடு மூலம் எரிபொருள் வழங்குவதற்கான ஒதுக்கீடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் ,போட்டித்தன்மையை அதிகரித்தல் உட்பட நான்கு முக்கிய பொறுப்புகளை அமைச்சர் காஞ்சன என்னிடம் ஒப்படைத்திருந்தார். நிரந்தரமான எண்ணெய் விநியோகத்திற்காக, குறுகிய காலத்திற்கு பதிலாக ஒரு வருட காலத்திற்கு எரிபொருள் கொள்முதல் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்பு எரிபொருளுக்கு கேள்விமனு கோரப்பட்ட போது களஞ்சிய வசதிக்கு ஏற்ப எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டது. பாரம்பரிய முறைக்குப் பதிலாக, உலகிலேயே மிகக் குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கும் நாட்களில் கேள்வி மனு கோரப்பட்டு எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டது.

முன்னதாக, பாதுகாப்பு கையிருப்புகளை பராமரிக்க எந்த ஏற்பாடும் இருக்கவில்லை. இதுவரை பெற்றோல், டீசல் உள்ளிட்ட 30,000 லீட்டர் எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்றாடச் செலவுகளுக்குத் தேவைப்படும் டொலர்கள் தவிர, மேலும் 60 மில்லியன் டொலர்களை கையிருப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நம் நாட்டிற்கு வரும் எரிபொருள் கப்பல்களிலிருந்து எரிபொருள் தரையிறங்கும் திகதி குறித்து உறுதியாக தெரியவில்லை.

ஏனைய நாடுகளின் பின்பற்றப்படும் எரிபொருள் கொள்வனவு குறித்து ஆராய்ந்து எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் பேச்சு நடத்தினோம். உலகில் நடைமுறையில் உள்ள முறைகளை ஆய்வு செய்து, புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, நாங்கள் இனி எந்தவித முன்பணமும் செலுத்தாதிருக்க தீர்மானித்தோம். இலங்கைக்கு வரும் எண்ணெய் கப்பல்கள் முழுமையாக நமது களஞ்சியங்களில் நிறுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமுள்ள டொலர்களைக் கொண்டே வாரத்திற்கு தேவையான கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும். இந்த முறையினால் பல நன்மைகள் ஏற்பட்டன. இடர் கட்டணங்கள் முற்றிலும் நீக்கப்பட்டது. தாமதக் கட்டணம் செலுத்தத் தேவையேற்படவில்லை.

இந்த முறையால் கப்பலொன்றில் இருந்து சுமார் 3.5 மில்லியன் டொலர்களை சேமிக்க முடிந்தது. 6 மாதங்களில் 63 மில்லியன் டொலர்களை சேமிக்க முடிந்தது. பெற்றோலியக் கப்பலில் இருந்து 3.3 மில்லியன் டொலர்களை சேமிக்க முடிந்தது. விமான எரிபொருளில் இருந்து சுமார் 149 மில்லியன் டொலர்கள் சேமிக்க முடிந்தது. இந்த புதிய முறையால் ஆண்டுக்கு 300 மில்லியன் டொலர்களை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கடந்த காலங்களில் தினமும் தாமதக் கட்டணம் மட்டுமே செலுத்தி வந்தோம். ஆனால் இப்போது முதல் முறையாக இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 13 மில்லியன் டொலர்களை தாமதக் கட்டணமாக எரிபொருள் நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளோம். முதல் தவணையாக 3 மில்லியன் டொலர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன் கிடைக்க இருக்கிறது. மீதமுள்ள 10 மில்லியன் டொலர்கள் விநியோகஸ்தர்களிடம் இருந்து அறவிடப்படும்.

எரிபொருள் போட்டித்தன்மையை உருவாக்கும் நோக்குடன் பதிவுசெய்யப்பட்ட மூன்று பாரிய சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இது போட்டித்தன்மையையும், தற்போதுள்ள டொலர் பிரச்சினைக்கு சிறந்த தீர்வையும் தரும். மேலும், ஒரு வருடத்திற்குள் 1.5 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக்கு செல்வதைத் தடுக்க முடியும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் சினோபெக் நிறுவனத்தின் கப்பல் ஒன்று இலங்கைக்கு வர உள்ளது. இதன் ஊடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலவிடும் டொலர்களை குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சு, மத்திய வங்கி, ஜனாதிபதி, அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர், QR குறியீட்டை நீக்க உத்தேசித்திருக்கிறோம். இன்றேல் எரிபொருள் வழங்கும் தொகை அதிகரிக்கப்படும்.

இதுவரையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மட்டுமே எரிபொருள் விலைச் சூத்திரத்தை முன்னெடுத்தது. இந்த புதிய முறையின் மூலம் அனைத்து நிறுவனங்களுக்கும் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், எதிர்காலத்தில் அதிகபட்ச சில்லறை விலையை மட்டுமே அமைச்சு முடிவு செய்யும். ஒரு நிறுவனம் விலையைக் குறைக்கும் போது, ஏனைய நிறுவனங்களும் விலையைக் குறைப்பதன் மூலம் நாடு பெரும் நன்மையை அடையும் என்றார்.

(ஜனாதிபதி ஊடகப்பிரிவு)

Comments