முஸ்லிம்களை திசை திருப்புவதற்கான தந்திரம்தான் மாடறுப்புத் தடை: ஊடகவியலாளர் நௌசாத் முஹிடீன் குற்றச்சாட்டு

🕔 January 23, 2016

BBS - 09876
பு
திய அரசியல் யாப்பினை உருவாக்கும் போது, அதிலிருந்து முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகக் கையாளப்படும் ஒரு குள்ள நரித் தந்திரம்தான், மாடறுப்பு தடை பற்றிய அறிவிப்பாகும் என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌசாத் முஹிடீன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பொது பல சேனா அமைப்பினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்ததன் பின்னரே, மாடறுப்புக்கான தடை குறித்து அவர் கருத்து வெளியிட்டதாகவும் நௌசாத் முஹிடீன் சுட்டிக்காட்டுகின்றார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொது பல சேனா முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான ரகசிய சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. இதில் பேசப்பட்ட விடயங்கள் பரம ரகசியமானவையாகும். ஐனாதிபதியின் ஊடக தரப்பிலிருந்து இதுபற்றி எந்த அறிவிப்புக்களும் வெளியாகவில்லை. இது வழமையானதாகும்.

ஆனால், இந்த சந்திப்பு திருப்தியாகவும், வெற்றிகரமாகவும் அமைந்ததாக பொது பல சேனா அறிவித்துள்ளது.

பொது பல சேனாவுடனான சந்திப்பின் பிறகு,  ஜனாதிபதி வெளியிட்டுள்ள சில அறிவிப்புக்கள் யோசிக்கும் படியானவை.

முதல் அறிவிப்பு மாடுகள் அறுப்பது தடை செய்யப்படும் என்பதாகும். அடுத்த அறிவிப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாடுகளின் ஒத்துழைப்பைப் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பது.

‘பிபிசி’க்கு அண்மையில் சிங்களத்தில் வழங்கிய பேட்டியில், ‘வெளிநாடுகளின் ஒத்துழைப்பைப் பெற வேண்டிய அவசியம் இல்லை’ என்பதை ஜனாதிபதி தெளிவாக சொல்லியுள்ளார். இந்த விடயத்தில் ஜனாதிபதியின் முன்னைய நிலைப்பாடு இதுவல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், இந்த விடயம் இப்போதைக்கு முஸ்லிம்களுக்கு முக்கியமானதல்ல என்பதால் இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம்.

இப்போதைக்கு மாடறுப்புத் தடை பற்றிப் பார்ப்போம்.

எமது சமூகம் மாடறுப்புத் தடை பற்றி வெகுவாக அலட்டிக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது. உண்மையில் இது நாம் அலட்டிக் கொள்ளவோ, கவலைப்படவோ வேண்டிய ஒரு விடயமே அல்ல.

மாட்டிறைச்சி விற்பனைத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட பலருக்கு, ஏற்கனவே மகிந்த அரசில் ஆப்பு வைக்கப்பட்டுவிட்டது. அவர்கள் வேறு வழிகளை தேடிக்கொண்டு விட்டனர். எஞ்சி உள்ளவர்கள் சொற்ப தொகையினர்தான். அவர்களுக்கும் இறைவன் நிச்சயம் வேறு வழிகளைக் காட்டுவான்.

இந்த விடயத்தை நாம் கண்டு கொள்ளாமல் சிறிது காலம் விடுவோமானால், தடை செய்தவர்களே இதற்காக வருந்தும் நிலை நிச்சயம் ஏற்படும்.

காட்டில் வாழும் சிங்கம், புலி  மற்றும் ஓநாய் போன்ற மிருகங்கள் – மான் மற்றும் மரை போன்ற மிருகங்களை வேட்டையாடி வாழ வேண்டும் என்பது இயற்கை நியதி.

கடலில் வாழும் திமிங்கிலம் மற்றும் சுறா என்பன கடலிலுள்ள சிறிய உயிரினங்களை புசித்தே வாழ வேண்டும்.

ஊர்வனவற்றின் உயிர் வாழ்வும் இந்த இயற்கை நியதிக்குக் கட்டுப்பட்டே அமைந்துள்ளது.

இவ்வாறான நியதிதிகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதில் கைவைத்தால், இயற்கை  சமநிலை பாதிக்கப்பட்டு மனிதன் அதன் பாதக விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

மேலும், மாடறுப்பு என்பது இந்த நாட்டில் முஸ்லிம்களோடு மட்டும் சம்பந்தப்பட்ட விடயமல்ல. இறைச்சிக்காக மாடுகளை அறுப்பவர்கள் முஸ்லிம்களாக இருக்கலாம். ஆனால் அவற்றை விற்பனை செய்பவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல.

இந்த நாட்டில் ஒரு தினத்தில் அறுக்கப்படும் மொத்த மாடுகளின் இறைச்சிகளையும் முஸ்லிம்கள் மட்டும் தின்று தீர்க்கவில்லை.

எனவே, இந்த விடயத்தை புத்திசாலித்தனமாகக் கையாண்டு, மாடறுப்புக்கான தடையை ஏற்று மெளனம் காத்தால், எமக்காக மற்றவர்கள் பேசும் நிலை நிச்சயம் ஏற்படும்.

மாடறுப்புக்கான தடை ஏற்பட்டால், ஹஜ் கால குர்பான் கடமையை நிறைவேற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படும் என சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், அதற்கும் மாற்று வழிகள் உள்ளன. அந்த மாற்று வழிகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை, ஜம்இய்யத்துல் உலமா சபையைச் சார்ந்தது.

இலங்கையில் இப்போது மிகப்பரவலாகப் பேசப்படும் விடயம் புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்குவதும், அதற்கான யோசனைகள் பற்றியனவுமாகும். 

இதில், தமிழ் தரப்பு தனது கோரிக்கைகளை வென்றெடுக்கும் முனைப்புடன் செயற்படுகின்றது.

ஆனால், முஸ்லிம் அரசியல் தரப்பு இதில் எந்த கவனமும் செலுத்தாமல் மாட்டிறைச்சிக்காக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இது மிகவும் கேவலமான நிலைமையாகும்.

புதிய அரசியல் யாப்பு விடயங்களில் இருந்து முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்ப கையாளப்பட்டுள்ள ஒரு குள்ள நரித் தந்திரமே மாடறுப்பு தடை பற்றிய அறிவிப்பாகும்’.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்