20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய வங்கி அதிகாரிகள்; ஓட்டமாவடியில் சம்பவம்: அகப்பட்டது எப்படி?

🕔 June 3, 2023

ட்டமாவடியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று ஊழியர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த வங்கியின் பிரதி முகாமையாளர், செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் சேவை உதவியாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கியின் பாதுகாப்பு வைப்பு பெட்டியில் இருந்து, அடகு வைக்கப்பட்ட 873 கிராம் தங்க நகைகளை திருடியதாக மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்கியின் பாதுகாப்பிலிருந்து காணாமல் போன பல தங்க நகைகள் குறித்து முறைப்பாடு கிடைத்ததையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நொவம்பரில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்பதற்காக வங்கிக்குச் சென்ற ஒரு நபர், அந்த பொருட்கள் காணாமல் போனதை அறிந்தார். வங்கி ஊழியர்கள் சோதனை நடத்தியதில், வங்கியின் பாதுகாப்பிலிருந்த 13 பொட்டலங்களாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மாயமாகி இருப்பதை அறிந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பிரதி முகாமையாளர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது, மேலும் இரண்டு பெண் ஊழியர்கள் – ஒரு செயல்பாட்டு முகாமையாளர் மற்றும் ஒரு சேவை உதவியாளர் – திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக பிரதி முகாமையாளர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தங்களிடம் இருந்த பாதுகாப்பு பெட்டகதட்தின் சாவியை பயன்படுத்தி மூன்று முறை தங்க நகைகளை திருடியுள்ளனர்.

13 பொட்டல தங்க நகைகளைத் திருடிய பின்னர், மூவரும் அவற்றை அப்பகுதியில் உள்ள தங்க நகைக் கடைகளுக்கு 13.7 மில்லியன் ரூபாவுக்கு விற்றுள்ளனர், அதில் 5.7 மில்லியன் ரூபா கடனைத் தீர்ப்பதற்காக பிரதி முகாமையாளரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை செயல்பாட்டு முகாமையாளர், தனது மகளுக்கு வங்கியில் வைப்புச் செய்வதற்காக அந்தப் பணத்தில் 05 மில்லியன் ரூபாயை வைத்திருந்தார். சேவை உதவியாளர் தனக்கு கிடைத்த 3 மில்லியன் ரூபாவில் ஒரு முச்சக்கர வண்டியையும் ஒரு காணியையும் வாங்கியிருந்தார்.

வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 02) ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் ஜூன் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்