மின்சார கட்டணத்தை 27 சதவீதமாவது குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

🕔 May 18, 2023

மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தினார்.

“ஆனால் “இலங்கை மின்சார சபை உண்மைச் செலவுத் தரவுகளை மறைத்து மின் கட்டணத்தை 3 வீதத்தால் குறைக்கும் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது. உண்மையான செலவுக் குறைப்புடன் ஒப்பிடும் போது மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு சரியான தரவுகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் கூறினார்.

“இந்த ஆண்டு பெப்ரவரி மாதம், போலியான தரவுகளைக் காண்பித்து 66 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. உண்மையில் அப்போது, 35 சதவீதம் மட்டுமே கட்டணத்தை உயர்த்தியிருக்க வேண்டும். அன்று, இலங்கை மின்சார சபையினால் மதிப்பிடப்பட்ட மின்சாரத் தேவையானது, 16,550 ஜிகாவாட்.

இந்த ஆண்டு மின்சாரத் தேவை 15,050 ஜிகாவாட் மணி நேரமாக மட்டுமே இருக்கும் என்பது எமது மதிப்பீடாக இருந்தது. ஏப்ரல் மாதம், எமது மதிப்பீடு சரியானது. ஆனால், அவர்களின் மின்சார சபையின் தேவை அதிகமாக மதிப்பிடப்பட்டது.

அதன்படி,எதிர்வரும் ஆண்டுக்கான தேவை 15,264 ஜிகாவாட் மணி நேரமாக இருக்கும் என்று மின்சார சபை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தனர்.

ஆணைக்குழுவின் மதிப்பீட்டின்படி மின்சாரக் கட்டணங்களை நிர்ணயித்து அமுல்படுத்தியிருந்தால் இன்று மின்சார பாவனையாளர்கள் எதிர்நோக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது” என்றும் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

“மின் தேவையை ஒப்பிடுவதற்கு முதல், மின்சாரம் வழங்குவதற்கான செலவையும் மின்சார சபை குறைக்க வேண்டும். மின்சார சபை 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 392 பில்லியன் ரூபா செலவாகும் என ஆரம்பத்தில் மதிப்பிட்டுள்ளது.

அடுத்த 6 மாதங்களுக்கு 285 பில்லியன் ரூபா செலவிடப்படும் என மின்சாரசபை கூறியது. ஆனால் எமது கணக்கீட்டின்படி, மின்சார விநியோகத்துக்கான உண்மையான செலவு 107 பில்லியன் ரூபாவால் குறைக்கப்படும். இவ்வாறு இருக்கும் போது, எதிர்வரும் காலக்கட்டத்தில் ஒட்டு மொத்தமாக 27 சதவீதமாவது மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.

இல்லையெனில்,போலியான தரவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர் குழுக்களுக்கு மட்டும் 3 சதவீதம் கட்டணத்தை குறைப்பதன் மூலம், அனைத்து மின் நுகர்வோருக்கும் நீதி கிடைக்காது.

மேலும், மின்சார சபைக்கு எதிர்பார்த்த வருமான அதிகரிப்பும் ஏற்படாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்