தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாள் அமர்வில் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க பிரதம பேச்சாளர்

🕔 May 13, 2023

– எஸ். அஷ்ரப்கான் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில், வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் இன்று (13) பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. 

பட்டமளிப்பு விழா முதல் அமர்வின்போது, களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.

இன்றும் நாளையும் என – இரண்டு நாட்களுக்கு ஐந்து அமர்வுகளாக இந்தப் பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. 

குறித்த பட்டமளிப்பு விழா – முதல் அமர்வில் கலை கலாசார, தொழில்நுட்ப பீடங்களைச் சேர்ந்த 395 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இரண்டாவது அமர்வில் முகாமைத்துவ – வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 371 மாணவர்களும், மூன்றாவது அமர்வில், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 380  மாணவர்களும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர். 

கலை கலாசார பீடத்தில் 2015/2016 ஆம் கல்வி ஆண்டில் அரசியல் மற்றும் சமாதான கற்கையில்  சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.எல்.ஏ. காதர் விருதை முகம்மட் அலி பாத்திமா அஸ்மியா பெற்றுக்கொண்டார்.

இதேவேளை தமிழில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் கைலாசபதி 2015/2016 ஆம் கல்வி ஆண்டில் முகம்மட் ஹுசைன் பாத்திமா றிஸ்லா பெற்றுக்கொண்டதுடன், அதே கல்வியாண்டில் இந்து கலாச்சார கற்கைக்கான சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருதை பேபி சாலினி ராமக்கவுண்டர் பெற்றுக்கொண்டார். 

இரண்டாவது அமர்வில் முகாமைத்துவ – வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த டிவயாளி கிடாரா மலீசா லக்சாணி வசந்த குமாரி 2015/2016 ஆம் கல்வி ஆண்டில் வர்த்தக துறையில் சிறந்த மாணவருக்கான அல் ஹாஜ் ஏ.எம்.இஸ்மாயில்  ஞாபகார்த்த விருதை பெற்றுக்கொண்டதுடன், முகம்மட் நஜீம் பாத்திமா நுஸ்ரா முகாமைத்துவ துறையில் அல் ஹாஜ் ஏ.எல். இப்ராலெப்பை ஞாபகார்த்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

மூன்றாவது அமர்வில், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் முகம்மட் ஆகில் 2015/2016 ஆம் கல்வி ஆண்டில் அரபு துறையில் சிறந்த மாணருக்கான எம்.எச்.அப்துல் காதர் ஆலிம் ஞாபகார்த்த விருதையும், முகம்மட் இப்ராகிம் பாத்திமா ஷீபா இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரீக துறையில் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி ஞாபகார்த்த விருதையும், கலந்தார் லெப்பை பாத்திமா மஸ்லிஹா இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி துறையில் சிறந்த மாணவருக்கான இஸ்மாயில் டீன் மரிக்கார் விருதையும் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை கிறிஸ்ண பிள்ளை மகாலிங்கம் முதுகலைப் பட்டத்தையும், சிரேஷ்ட ஊடகவியலாளர் முஹம்மட் ஜெஸ்மி மூஸா  தத்துவ முதுமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இரண்டாம் நாள் அமர்வில் (நான்காவது அமர்வில்) பிரயோக விஞ்ஞானங்கள், பொறியியல் ஆகிய பீடங்களைச் சேர்ந்த 332 மாணவர்கள் பட்டங்கள் பெறவுள்ளனர். ஐந்தாவது அமர்வில் கலை கலாசார, முகாமைத்துவ – வர்த்தக பீடங்களில் இணைந்து கல்வி கற்ற 374 வெளிவாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அதேநேரம், வியாபார நிருவாகம், முகாமைத்துவம், தமிழ் உள்ளிட்ட துறைகளில் பட்டப்பின்படிப்புக்களை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதுமாணி, முது தத்துவமாணி பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் த. ஜெயசிங்கம் விஷேட உரையாற்றவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்