பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

🕔 May 10, 2023

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை நேற்று (09) முன்வைத்துள்ளார்.

மின்வெட்டு, மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் ஏனைய முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் அமைச்சருக்கும் ஜனக ரத்நாயக்கவுக்கும் இடையில் பல மாதங்களாக இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளின் பின்னரே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் எடுத்த தீர்மானங்களை ஜனக ரத்நாயக்க கடுமையாக எதிர்ப்பதாகவும் சவாலுக்குட்படுத்துவதாகவும் காணப்பட்டது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 7 ஆம் சரத்தின் பிரகாரம் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணையானது – அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கையொப்பமிடப்பட்ட குற்றப்பத்திரிகை ஒன்றும் மார்ச் 22 ஆம் திகதி ஜனக ரத்நாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நீண்ட மோதல்களுக்குப் பிறகு ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான தனது முடிவை இந்த ஆண்டு ஜனவரியில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க – மின்சாரக் கட்டணத்தை உடனடியாக 20% குறைக்குமாறு கோரிய ஒரு நாளுக்குப் பின்னரே, அவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கான இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தையும் ஜனக ரத்நாயக்க இந்த வாரம் வெளிப்படுத்தினார்.

பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தி, தற்போதைய நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் கொள்கைகளை முன்வைப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

ரத்நாயக்கவின் கருத்துப்படி அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்