கோட்டாவின் எஞ்சிய காலமே ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ளது; அதனைத் தாண்டி அவருக்கும் எமக்கும் ஒப்பந்தங்கள் இல்லை: பொதுஜன பெரமுன செயலாளர் அதிரடி

🕔 May 8, 2023

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பதவியின் எஞ்சிய காலத்துக்காகவே ரணில் விக்ரமசிங்கவை தாங்கள் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாகவும், அதனை மாத்திரமே அவரிடம் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.

“அதனைத் தாண்டி அவருக்கும் எனக்கும் ஒப்பந்தங்கள் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

“பொதுஜன பெரமுனவுக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை நாம் எப்போதும் மறக்கவில்லை. நாம் வழங்கிய வேலைத்திட்டத்துக்கு அமைவாகவும், நம்பிக்கையின் அடிப்படையிலுமே மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.

எனவே வேலைத்திட்டத்துக்கு முரணாக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வேறு பக்கத்துக்குச் செல்லுமாயின், அது தொடர்பில் – கட்சி எனும் ரீதியில் கலந்துரையாட நேரிடும்” எனவும் அவர் கூறினார்.

தற்போதுள்ள அமைச்சரவைக்கு பொதுஜன பொரமுனவின் அமைச்சரவை எனப் பெயரிட தான் விரும்பவில்லை என்றும் இதன்போது சாகல காரியவசம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்