இலங்கை கிறிக்கட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொலை

இலங்கை கிரிக்கெட் அணி மீது – 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூரில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரொருவரை அந்த நாட்டு பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பாலி கயாரா என அழைக்கப்படும் இக்பால் எனும் நபரே இவ்வாறு பதே மூர் எனும் இடத்தில் வைத்துக் கொல்லபட்டுள்ளார்.
இவர் அல்-கொய்தா மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் கயாரா ஆகிய இயக்கங்களின் உறுப்பினர் எனக் கூறப்படுகிறது.
இக்பால் மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவராக இருந்தார். அவரைப் உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10.5 மில்லியன் பாகிஸ்தான் ரூபா அன்பளிப்பாக வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் மீது இக்பால் தாக்குதல் நடத்தியதாவும், அதற்கு பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் இக்பாலும அவரின் சகா ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
26 பயங்கரவாத வழக்குகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளில் இக்பால் தேடப்பட்டு வந்தார்.
அங்குள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் மற்றும் 2009 இல் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் ஆகியவற்றிலும் இக்பால் ஈடுபட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் 7 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, அஜந்த மெண்டிஸ், திலன் சமரவீர, தரங்க பரணவிதான மற்றும் சமிந்த வாஸ் உட்பட ஏழு வீரர்கள் காயமடைந்தனர்.