முன்னாள் எம்.பி ரங்காவுக்கு பிணை: ஆனாலும் சிறையில்

🕔 May 3, 2023

னாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்கொழும்பிலுள்ள தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவுக்கு இன்று (03) பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ரங்காவை 20,000 ரூபா ரொக்கப் பிணையில், 0 5 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்லுமாறு பதில் நீதவான் பண்டார இளங்கசிங்க உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி, ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீரங்கா தீவிரமாகப் பங்கேற்றதாகவும், சட்டவிரோதமாக ஒன்று கூடிய பின்னர் – சொத்துக்களை சேதப்படுத்துவதற்கு உதவியதாகவும், அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபராகப் பெயரிட்டிருந்தனர்.

இருந்தபோதிலும், ரங்கா ஓர் ஊடகவியலாளராக கடமையாற்றிய வேளையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார் என்று அவரின் சட்டத்தரணி வாதிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெ.ஸ்ரீ ரங்காவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தீயிட்டு கொளுத்தியதுடன், சொத்துக்களுக்கும் பாரிய சேதம் ஏற்படுத்தியிருந்தது.

இது இவ்வாறிருக்க 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு ஒன்றின் சாட்சிகளை மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே அவர் சிறைச்சாலையிலிருந்து இன்றைய தினம் நீதிமன்று அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்