அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் 05 உறுப்பினர்கள், கட்சிகளிலிருந்து நீக்கம்

🕔 March 11, 2023

– புதிது செய்தியாளர் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் சில உறுப்பினர்கள் – அவர்கள் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, உறுப்பினர்களான ஏ.எஸ்.எம். உவைஸ் மற்றும் ரி. ஆப்தீன் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

இவர்கள் மூவரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு, பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஜெமீலா ஹமீட், எஸ். ஜாஸ்மின் மற்றும் ஏ.பி. பதுறுதீன் ஆகியோர் தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

இவர்கள் தற்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு சார்பாக போட்டியிடுகின்றமையினைச் சுட்டிக்காட்டியே, அவர்கள் இவ்வாறு கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இவர்கள் வகிக்கும் பிரதேச சபை உறுப்புரிமையினை மேற்படி நபர்கள் இழக்க நேரிடும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இருந்த போதிலும், எதிர்வரும் 19ஆம் திகதி அனைத்து உள்ளூராட்சி சபைகளும் கலைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்