சட்டவிரோத நடவடிக்கையை சகித்து கொள்ளுமாறு, சம்மாந்துறை தவிசாளர் எழுத்துமூலம் கோரிக்கை: ‘அரசியல் கோமாளித்தனம்’ என மக்கள் கிண்டல்

🕔 February 22, 2023

– அஹமட் (புதிது செய்தியாளர்) –

பொதுமக்களுக்கு அசௌரியங்களையும் ஆபத்துக்களையும் ஏற்படுத்தும் சிலரின் செயற்பாடுகளை சகித்துக் கொள்ளுமாறு, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் – இன்று எழுத்து மூலம் கோரிக்கையொனறை விடுத்துள்ள நிலையில், அது குறித்து அப்பிரதேச மக்கள் தமது கோபத்தையும் கேலியையும் வெளியிட்டு வருகின்றனர்.

சம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீதிகளில் – சிலர் நெல் உலர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அவற்றினை சில வாரங்களுக்கு பொதுமக்கள் சகித்துக் கொள்ள வேண்டுமென்றும், சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசார் மாஹிர், பிரதச சபையின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘பொதுமக்களுக்கான அறிவித்தல்’ எனும் தலைப்பில் இன்றைய தினம் (23) தவிசாளர் மாஹிர் வெளியிட்டுள்ள அந்தக் கடிதத்தில்;

‘எமதூரின் முக்கிய ஜீவனோபாய தொழிலான நெற்செய்கை தற்போது அறுவடை செய்யப்படுகிறது. காலநிலை சீர்கேடு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற கஷ்டங்களுக்கு மத்தியில் விவசாயிகள் தமது அறுவடையினை மேற்கொண்டு – கிடைத்த நெல்லினை வீதிகளிலும் பொது இடங்களிலும் காய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

எனவே பொதுமக்களும் வாகனம் செலுத்துவோரும் இரண்டு வாரங்களுக்கு பொறுமை காத்து, விவசாயிகள் தமது நெற்களை வீதிகளில் உலர்த்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது இடங்களிலும் பொது வீதிகளிலும் – நெல் உலர்த்தும் நடவடிக்கைகளால் கடந்த காலங்களில் பல்வேறு வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளமை நாம் அறிந்ததே.

மேலும் பொது இடங்களில மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள் சட்டத்துக்கு முரணானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நடவடிக்கையினை பொதுமக்கள் சகித்துக் கொள்ளுமாறு சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் மாஹிர் கோரிக்கை விடுத்துள்ளமையானது – அரசியல் கோமாளித்தனமானது’ என அப்பகுதி மக்கள் கிண்டலடிக்கின்றனர்.

இம்முறை நடைபெறவுள்ள சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐ.எல்.எம். மாஹிர் போட்டியிடுவதாவும், சிலரின் ஆதரவைப் பெறும் பொருட்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, வீதியில் நெல் உலர்த்துவோர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சம்மாந்துறை பிரதச சபையின் தவிசாளராகப் பதவி வகித்த ஏ.எம். நௌசாத், அந்தப் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தமையினை அடுத்து, அந்த இடத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் மாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Comments