இணைந்த வடகிழக்கு சாத்தியமாகும் போது, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்கள் தமிழர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி

🕔 February 20, 2023

மிழ் மக்களின் அரசியல் அபிலாசையான இணைந்த வட, கிழக்கென்பது சாத்தியமாகும் போது – திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தமிழர்களுடைய கைகளிலே மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் – 2023 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வேட்பாளர்கள் அறிமுகத்துடனான தேர்தல் பரப்புரை மக்கள் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இந்த பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வீதியின் இரண்டு பக்கங்களிலும் மக்களை காணமுடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. நாம் ராணுவ முகாம்களைத்தான் பார்க்க முடிகிறது.

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ‘கோட்டா’வின் பெயரில் படை முகாம் எதற்கு,

வடக்கு – கிழக்கினை பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்கள் என்றால் திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தான்.

எமது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான இணைந்த வட, கிழக்கென்பது சாத்தியமாகும் போது – திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தமிழர்களுடைய கைகளிலே மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நடைபெறவுள்ள இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதொரு தேர்தல்.

நாங்கள் வீதி வீதியாக இறங்கி ராணுவமே வெளியேறு என கோசங்களை எழுப்புகின்றோம். அதேபோன்று இதனை நாடாளுமன்றத்திலும் சொல்லும் ஒரே ஒரு கட்சி தமிழரசு கட்சிதான்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆசனங்களிலிருந்து 10 ஆசனங்களுக்கு வாக்கு சரிவு வந்திருக்கின்ற காரணத்தினால், வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் ‘ராணுவமே வெளியேறு’ என வீதியிலே சொன்னாலும் கூட, இது தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரைக்காக சொல்லுகின்ற கோசமே தவிர – இது மக்களுடைய அபிலாசை இல்லை என்ற சந்தேகம் சில வேளைகளில் ஏற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

எங்களுக்கான வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தினால் சர்வதேசத்துடன் பேசும் போது, எங்களுடைய பலம் குறைந்துள்ளதாகவே காணக்கூடியதாக இருகின்றது.

இதன் காரணமாகவே நாம் சொல்கின்றோம் – மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த சின்னம் தலைவர் காட்டிய சின்னம். உலக நாடுகளுக்கு நன்கு தெரிந்த சின்னம். ஆகவே மக்கள் இந்த சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

(நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்