இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள், இந்தியக் கடனில் இறக்குமதி: டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவிப்பு

🕔 February 10, 2023

ந்தியாவிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 36 வகையான மருந்துகள், இலங்கையில் பதிவு செய்யப்படாதவை என, தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்தியா வழங்கிய கடனில் – இந்த மருந்துகள், குஜராத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடனில் வாங்கப்பட்ட 80 சதவீத மருந்துகள் – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையில் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடனில் – நோயாளர்களுக்கு தேவைப்படாத மருந்துகளும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் மருந்துப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மருந்துகளும், இதில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் டொக்டர் விஜேவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.

“இது ஒரு தீவிரமான பிரச்சினை. நோயாளிகளுக்குத் தேவையில்லாத இருமல் மருந்துகள் மற்றும் ஷாம்புகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் மதிப்பீட்டுக் குழுவின் அங்கீகாரத்துக்காக வழங்கப்பட்ட மருந்துப் பட்டியலில், நாட்டில் சுமார் 270 வகையான மருந்துகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

தேவையற்ற மருந்துகளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடுக்குமாறு, இலங்கை மருத்துவ சங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சுக்கும் ஜனாதிபதிக்கும் அறிவித்திருந்தது. ஆனால், இது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் ஏற்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்