கண்டியில் நடைபெற்ற ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த பொய்யான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் நிராகரிப்பு

🕔 February 4, 2023

லங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்கள் மற்றும் 6 உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கடந்த 02 ஆம் திகதி கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ராஜதந்திர நிகழ்வு தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான தகவல்கள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த ராஜதந்திரிகள் இலங்கை பொலிஸாரின் விசேட பாதுகாப்புடன் காரில் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பிலும் சிலர் விமர்சித்துள்ளனர்.

பெப்ரவரி 04 ஆம் திகதி நாட்டின் 75 ஆவது தேசிய சுதந்திர தினம் ஆகையால் அதனை முன்னிட்டு பல விசேட நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதனுடன் இணைந்ததாகவே இந்த நிகழ்வும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

1961 இல் ஏற்படுத்தப்பட்ட ராஜதந்திர உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கை உட்பட உலகின் நாகரீக நாடுகளின் பாரம்பரியத்தை மதித்து, தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தங்கள் நற்சான்றிதழ்களை கையளிக்க வரும்போது அவர்களுக்கு ராஜதந்திர ரீதியிலான கௌரவத்தை வழங்க வேண்டியது இலங்கையில் ஆட்சியிலுள்ள எந்த ஒரு அரசாங்கத்தினதும் பொறுப்பாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் தவறான தகவல்களை பரப்பும் முயற்சியை நிராகரிப்பதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்