‘ஐஸ்’ போதைப் பொருளுடன், ஓட்டமாவடி நபர்கள் வாழைச்சேனையில் கைது

ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த சந்தேக நபர்கள் இருவர், வாழைச்சேனை பிரதேச்தில் கைது செய்யப்பட்டனர்.
கல்முனை விசேட அதிரடிப் படையினர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த இருவரையும் கைது செய்தனர்.
கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) இரவு வாழைச்சேனை நகரப்பகுதியில் வைத்து, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதான நபர்கள் இருவரும் ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த 51 மற்றும் 36 வயதுடையவர்களாவர்.
இவர்கள் வசமிருந்து ஐஸ் போதைப்பொருள்கள் முறையே 5 கிராம் 140 மில்லிகிராம் மற்றும் 9 கிராம் 340 மில்லி கிராம் உட்பட மோட்டார் சைக்கிள் ஒன்றும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சான்றுப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்பட்டனர்.