
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘கொவிட் 19 – சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின்’ செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இது நிறுவப்பட்டது.
இலங்கை வங்கியின் 85737373 என்ற கணக்கு இலக்கமான ‘கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்’ ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதாக கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயலாளர் டொக்டர் தாரக லியனபத்திரன பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
இனிமேல் இந்த நிதியத்துக்கு பொதுமக்கள் நன்கொடை அளிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிதிக்காக காசோலைகளையோ பணத்தையோ ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர் நன்கொடையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்று நோயின் போது, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை – வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக, இந்த நிதியத்துக்குப் பங்களித்த நன்கொடையாளர்களுக்கு தனது பாராட்டுகளை நிதியத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியத்துக்கு மொத்தம் ரூ. 220 கோடி 71 லட்சத்து 64 ஆயிரத்து 785 ரூபா 58 சதம், இந்த நிதியத்துக்குக் கிடைத்திருந்தது.
இந்தத் தொகையில் ரூ. 199 கோடி 75 லட்சத்து 69 ஆயிரத்து 456 ரூபா 56 சதம் செலவிடப்பட்டது.
பிசிஆர் பரிசோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு வசதிகளை வழங்குதல், தேசிய தடுப்பூசி திட்டம், தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கான படுக்கைகள் வாங்குதல் மற்றும் மருந்துகள் வாங்குதல் போன்றவற்றுகா மேற்படி தொகை செலவானது.
நேற்று முன்தினம் (18ஆம் திகதி) நிலவரப்படி, கொவிட் நிதியில் மீதமுள்ள தொகை 21 கோடி 68 லட்சத்து 77 ஆயிரத்து 431 ரூபா 05 சதமாகும்.
இந்த நிதி – சத்திர சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளது.



