தலைப்புச் செய்திகள்

சுற்றுலாத்துறையில் முன்னேற்றம்: ஓகஸ்ட் மாத வருமானம் மட்டும் 2416 கோடி ரூபா

நாட்டில் சுற்றுலாத்துறை மீளெழுச்சியடைந்து வருவதோடு, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் தொகுக்கப்பட்ட வருவாய்த் தரவுகளின்படி, ஒகஸ்ட் மாதத்தில் சுற்றுலா மூலம் இலங்கை 67.9 மில்லியன் அமெரிக்க டொலரை (இலங்கை மதிப்பில் 2416 கோடி ரூபா) ஈட்டியுள்ளது.

ஆனால் ஜூலை மாதத்தில் 85.1 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருமானமாக ஈட்டப்பட்டது.

ஒப்பீட்டளவில் கடந்த மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்தமையினால், முந்தைய மாதத்தை விட ஓகஸ்ட் வருமானம் சற்று குறைவடைந்துள்ளது.

ஜூலை மாதத்தில் 47,293 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் அந்த எண்ணிக்கை 37,760 பேர் வரை சுமார் 10 ஆயிரத்தினால் குறைந்துள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதம் தொடக்கம் அமெரிக்க டொலருக்கு நிகரான பெறுமதியில் 80 வீதத்தை இலங்கையின் நாணயம் இழந்ததையடுத்து, இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு ஒப்பீட்டளவில் மலிவான சுற்றுலாத் தலமாக இலங்கை மாறியது.

ஜூலையில் ஏற்பட்ட பாரிய சமூக அமைதியின்மை கணிசமாகத் தணிந்துள்ள நிலையில்  சில வாரங்களுக்கு முன்னர் பல ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்தியுள்ளன.

ஓகஸ்ட் மாத வருவாயுடன், சுற்றுலா பயணிகளின் வருகையால் கடந்த எட்டு மாதங்களில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் 892.8 மில்லியன் டொலராக (இலங்கை பெறுமதியில் 31772 கோடி ரூபா) உயர்ந்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் சுற்றுலா தொழில்துறையைத் தாக்கியதால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுற்றுலா வருவாய் 63.5 மில்லியன் அமெரிக்க டொலராக  இருந்தது.

இந்த ஆண்டு சுற்றுலா வர்த்தகத்தில் இருந்து குறைந்தது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

செப்டம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுடன், மொத்தமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த வருடத்தில் 5 இலட்சத்தை தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.