தலைப்புச் செய்திகள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாதாந்த கடன் வசூல் 69.9% அதிகரிப்பு: கண்டி செயலமர்வுக்கு கிடைத்த வெற்றி

– முனீரா அபூபக்கர் –

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்களுக்கு கண்டியில் நடைபெற்ற செயலமர்வின் பின்னர், அதிகாரசபையின் கடன் மீளப்பெறுதல் 69.9% ஆக அதிகரித்துள்ளதாக, சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்தார்.

கடந்த மாதம் (ஓகஸ்ட்) கிட்டத்தட்ட 260 மில்லியன் ரூபாவை அதிகாரசபையின் கடனில் இருந்து மீளப் பெற முடிந்தது. கடந்த ஜூலை மாதம் 153 மில்லியன் ரூபா மட்டுமே மீளப் பெறப்பட்டது.

1979 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுக் கடனிலிருந்து அதிகாரசபை மீளப் பெற வேண்டிய தொகை 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக உள்ளது. மாதாந்தம் பெறப்பட வேண்டிய தொகை 563 மில்லியன் ரூபாவாகும்.

ஆனால் சமீபத்திய கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கடன் மீளப் பெறுதல் குறைந்துள்ளது.

ஜூலை மாதம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 153 மில்லியன் ரூபாவை மட்டுமே இது தொடர்பான கடன்களில் இருந்து மீளப் பெற முடிந்தது.

இதன்படி கண்டி செயலமர்வின் பின்னர் மாதாந்தம் 300 மில்லியன் ரூபா மீளப் பெறுதல் இலக்கு மாவட்ட முகாமையாளர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவித்த தலைவர், அதற்கான செயற்திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் கடன் வசூல் 69.9% அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அதிகார சபையின் தலைவர்; தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு 165 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப திறைசேரியில் தங்கி இல்லாமல் வருமானம் ஈட்டும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை 20,747 வீடுகளை நிர்மாணிக்கும் பணியை ஆரம்பித்துள்ளது. அவற்றில் 13,011 வீடுகள் நிறைவு செய்யப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் 7,733 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளன. 550 சதுர அடி அளவுள்ள ஒவ்வொரு வீடும், ஒரு வரவேற்பு அறை, 02 படுக்கையறைகள் மற்றும் ஒரு சமையலறை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் காணி உள்ளவர்களுக்காக வீடொன்றை அமைக்கும் பொருட்டு 650,000 ரூபாவை வழங்கப்படுகிறது. இது தவணை முறையில் வீட்டு உரிமையாளரிடமிருந்து மீளப் பெறப்படுகிறது.

தொடர்பான செய்தி: வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கிய கடன்: மாதாந்தம் 300 மில்லியன் ரூபா மீளப்பெறுவதை இலக்காக வைத்து வேலைத் திட்டம்