தலைப்புச் செய்திகள்

கோட்டாவுக்கு பிரதமர் பதவியா?: ருவான் விஜேவர்த்தன பதில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது பற்றியோ அல்லது வேறு எந்தப் பதவியை வழங்குவது பற்றியோ எந்த விதான பேச்சுக்களும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

“கோட்டாபய ராஜபக்சே தொடர்பாக பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை. அவர் அரசியலில் நீடிப்பதா இல்லையா என்பதை அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை” என ஊடகங்களிடம் ருவான் விஜேவர்தன கூறினார்.

அதேவேளை, தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில், கோட்டாபய ராஜபக்ஷ – மீண்டும் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் இதன்போது ருவான் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்கவும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவது அவசியம் என்றும் விஜேவர்தன தெரிவித்தார்.