
நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் வரப்பிரசாதம் என்பன வழங்கப்படுவதுடன், அதற்கு அமைவாக பிரமுகர் பாதுகாப்பு தற்போது கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான, எஸ்.கியூ 468 என்ற விமானத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவி அயோமா ராஜபக்ஷவுடன் நேற்றிரவு 11.47க்கு நாட்டை வந்தடைந்ததார்.
முன்னாள் ஜனாதிபதியை வரவேற்பதற்காக, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
இதன்போது, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன.
கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக கொழும்பில் உள்ள வீடு ஒன்று வழங்கப்படவுள்ளது. அதுவரையில் அவர் மிரிஹானையில் உள்ள தமது இல்லத்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் காரணமாக, கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி இலங்கையிலிருந்து மாலைதீவுக்கு தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், அவரது மனைவியும், ஜுலை 14ஆம் திகதி அங்கிருந்து சிங்கப்பூர் சென்றனர்.
பின்னர், சிங்கப்பூரில் சிறிது காலம் தங்கியிருந்த அவர்கள், கடந்த மாதம் 11ஆம் திகதி தாய்லாந்துக்கு சென்று அங்கு தங்கி இருந்தனர்.
இவ்வாறாக, ஒரு மாதமும், 20 நாட்களும் மாலைதீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் தங்கியிருந்த அவர்கள் நேற்றிரவு மீளவும் நாடுதிரும்பினர்.



