அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை; வெட்கப்படும் பரீட்சை முடிவும் ஆண் பிள்ளைகளின் எதிர்காலமும்: சீரழிவுக்கு யார் பொறுப்பு?

🕔 September 3, 2022

– மரைக்கார் –

யர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு பிரதேசமும் தங்கள் ஊரில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளோரின் விவரங்களை சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், சில ஊர்கள் வெந்து – நொந்து, வெட்கப்பட்டுக் கிடக்கின்றன. அப்படியான ஊர்களில் அட்டாளைச்சேனையும் ஒன்று.

ஒரு காலத்தில் உயர்தரப் பரீட்சை முடிவு வந்தாலே அட்டாளைச்சேனை – களைகட்டும். பல்கலைக்கழகத்துக்கு தெரிவானோரின் பட்டியல் நீளமானதாக இருக்கும். ஆனால் இம்முறை – நிலைமை தலைகீழ்.

ஆண் மாணவர்களின் அவல நிலை

குறிப்பாக ஆண் மாணவர்கள் எவரும் பரீட்சை முடிவுகளில் சோபிக்கவில்லை. மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ள இரண்டு (அல்லது 03) மாணவர்களும் பெண்கள். இம்முறை நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளவர்களில் பெரும்பான்மையானோர் பெண் மாணவிகளாவே உள்ளனர்.

இந்த விடயத்தை படித்துக் கொண்டிருக்கும் சிலருக்கு இந்த எழுத்துக்கள் மீது கோபம் வரலாம். ஊர் மானத்தை கப்பலேற்றுவதாக ஆத்திரம் ஏற்படலாம். ஊருக்குள் கஞ்சா வியாபாரம் நடப்பதை தடுக்க முடியாதவர்கள், கஞ்சா வியாபாரியை பொலிஸார் கைது செய்ததைப் பற்றி – செய்தி எழுதுகின்றவர்கள் மீது கோபப்படும் காலத்தில் – இது புதினமில்லைதான். எனவே, ஊர் நாறினாலும் அதனை வெளியில் சொல்லிவிடக் கூடாது என்கிற ரகங்கள் இதை தொடர்ந்து படிக்கத் தேவையில்லை.

அட்டாளைச்சேனையில் கடந்த காலங்களில் உயர் தரப் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் – அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை (மத்திய கல்லூரி) மாணவர்கள். ஆனால், இம்முறை தேசிய பாடசாலையின் நிலைமை வெட்கக் கேடாகியுள்ளது.

என்ன காரணம்? ஒன்றுமில்லை, ஒழுக்கமில்லாத இடத்தில் கல்விக்கு வேலையில்லாமல் போய்விட்டது.

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி மாணவர்களில் கணிசமானோரிடம் பெரும்பாலும் ஒழுக்கமில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் முடிவெட்டிக்கொள்ளும் ‘அழகில்’ அதனைத் தெரிந்து கொள்ளலாம். மாணவர்களின் தலைகளில் ‘காகக் கூடு’களை நிறையவே காண முடியும்.

கல்வி எப்போது சீரழியத் தொடங்குகிறது?

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் ஒருவன் தோள்பட்டை வரை நீளமாக முடி வளர்த்துக் கொண்டு திரிந்தான். அந்தளவு முடி வளர்ப்பதற்கு ஆகக்குறைந்தது 03 ஆண்டுகளாவது தேவை. ஆனால், அவன் தினமும் பாடசாலை சென்று வந்தான். அவனுக்கு இப்படி நீளமான முடியிருப்பது அங்குள்ள அதிபர், ஆசிரியர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவனிடம் கேட்பதற்கோ, ‘முடியை வெட்டாமல் பாடசாலைக்குள் வரக்கூடாது’ என்று உத்தரவிடுவதற்கோ யாருக்கும் துப்பிருக்கவில்லை. பாடசாலை செல்லும் போது, முடியை அவன் தொப்பிக்குள் சுருட்டி வைத்துக் கொள்வான். இப்போது அவன் சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு வீட்டிலிருக்கிறான்.

அட்டாளைச்சேனையில் வீதிகளில் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் பைக் ஓட்டுபவர்களில் தேசிய பாடசாலை மாணவர்களையும் காண முடியும். மோட்டார் பைக்களில் தலைக்கவசமின்றி இரண்டுக்கு மேற்பட்டோர் அமர்ந்து கொண்டு, மிக வேகமாகவும் மற்றவர்களை அச்சுறுத்தும் படியும் இவர்கள் வண்டியோட்டுவதை தினமும் காணலாம்.

அப்படியென்றால் இந்த மாணவர்களின் பெற்றோர் – குறிப்பாக தந்தையர்கள் இதனைக் கவனிப்பதில்லை என்றுதானே அர்த்தம். பாடசாலைக்குச் செல்லும் தனது மகன், தலையில் ஒரு ‘குப்பை மேட்டை’ப் போல் முடியை வளர்த்து வைத்திருப்பதை தந்தை கவனிக்கத் தவறும் போதுதான், மகனுடைய கல்வி சீரழியத் தொடங்குகிறது.

இந்த மாணவர்களை பாடசாலையில் – ஏன் ஆசிரியர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிற கேள்வியொன்று எழுகிறதல்லவா?

பதவிப் போட்டிகளும் வெட்டுக் குத்துகளும்

அதிபர் மற்றும் பிரதியதிபர் உள்ளிட்ட பதவிகளுக்கான போட்டிகளும், வெட்டுக் குத்துகளும் நீண்ட காலமாகவே அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் உள்ளதால், மாணவர்களின் கல்வியில் இந்தச் சீரழிவு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலத்தில் அதிபர் ஒருவர் – மாணவர் கும்பலொன்றை ரவுடிகள் போல், தன்னைச் சுற்றி வைத்திருந்தார். அந்த அதிபருக்கு பிரச்சினைகள் வந்தபோது, மாணவர்களை அவர் சண்டித்தனத்துக்காக களமிறக்கினார்.

பாடசாலைப் பருவமென்பது இரண்டுங்கெட்டான் வயது. களி மண்ணைக் கொண்டு குயவன் – தான் விரும்பிய பொருட்களைச் செய்வது போல், மாணவர்களை தயார் படுத்தியெடுக்கலாம்.

கசக்கும் உண்மை

அப்படியென்றால், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் தற்போதைய கல்வி வீழ்ச்சிக்கு மாணவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் வழிப்படுத்தப்படவில்லை, அவர்களின் ஒழுக்கத்தில் நெறிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் கசக்கும் உண்மையாகும்.

இந்த விடயத்தில் அந்தப் பாடசாலை சமூகத்தினரும், ஊரில் உள்ள படித்த ‘வெள்ளைக் கொலர்’ ஆட்களும் மிக நீண்ட காலமாகவே ‘சும்மா’ இருந்தனர். அவர்கள் தொடக்கத்திலேயே களத்தில் இறங்கியிருந்தால், ஆரம்ப அறிகுறியின் போதே ‘நோய்க்கு’ மருந்து கொடுத்து சுகப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் இப்போதுதான் தேசிய பாடசாலையில் பிள்ளைகளை படிக்க விட்டுள்ளோருக்கு சின்னதாக ‘பொரி’ தட்டியிருக்கிறது. அதனால் அவசரமாக தகைமையுள்ள அதிபர் ஒருவரை அவர்கள் தேடத் தொடங்கியுள்ளார்கள். அந்தப் பாடசாலையில் இருந்த தரம் 1 (Grade 01) அதிபர் அங்கிருந்து சென்றமையை அடுத்து, அங்கு பிரதியதிபராக இருந்தவர் தற்காலிகமாக அதிபராக செயற்பட்டு வருகின்றார்.

இப்போது தேசிய பாடசாலைக்கு ‘நல்ல’ அதிபர் ஒருவரை தேடுவோர், மற்றைய பாடசாலையொன்றின் ‘தாலியை அறுத்தாவது’, அங்குள்ள அதிபர் ஒருவரை கழற்றியெடுத்து – தேசிய பாடசாலைக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் ஒன்றை மட்டும் விளங்கிக் கொண்டு காரியமாற்ற வேண்டும். அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையைப் பீடித்திருப்பது தலைவலியோ, காய்ச்சலோ அல்ல. புற்றுநோய்.

கடுமையான மருத்துவமும், நீண்ட கால சிகிச்சையும் அதற்குத் தொடர்ச்சியாகத் தேவைப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்