
– அஹமட் –
அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக்காக, பாவங்காய் வீதியை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களில், உடனடியாக அந்தப் பகுதி மாணவர்களைக் கொண்டு வகுப்புகளை ஆரம்பிக்குமாறு, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மதுல்லா உத்தரவு வழங்கிய போதிலும், அது தொடர்பில் பாடசாலை அதிபர் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது.
அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளை – இடம்மாற்றி நடத்திச் செல்லும் பொருட்டு, பாவங்காய் வீதிக்கு சமீபமாக மூன்று கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் அன்பளிப்பாக வழங்கிய காணியில், கல்வி அமைச்சின் பல கோடி ரூபா நிதியிலிருந்து அங்கு மூன்று கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குறித்த கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு நீண்ட காலம் கடந்துள்ள போதிலும், அங்கு ஆரம்பப் பிரிவு வகுப்புகளைக் கொண்டு செல்லாமல், பாடசாலை நிர்வாகம் இழுத்தடிப்புகளை செய்து வருவதாக பாடசாலை சமூகத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து அல் முனீறா பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை அழைத்து – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அண்மையில் பேசியிருந்தார்.
இதன்போது குறித்த கட்டடத்தில் அந்தப் பகுதியை அண்மித்து வசிக்கும் ஆரம்பப் பிரிவு மாணவர்களைக் கொண்டு உடனடியாக ஒரு வகுப்பையேனும் ஆரம்பிக்குமாறு, வலயக் கல்விப் பணிப்பாளர் உத்தரவிட்டார். அதேவேளை, அடுத்த வருடம் தொடக்கம் அங்கு ஆரம்பப் பிரிவை முழுமையாகத் தொடங்குமாறும் வலயக் கல்விப் பணிப்பாளர் பணித்தார்.
பல கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடங்கள் – நீண்ட காலமாக பாழடைந்து கிடப்பதனால், அந்தக் கட்டடங்களின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த மின் விசிறிகள் அண்மையில் களவாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்தே, அந்தக் கட்டடங்களில் ஆரம்பப் பிரிவு வகுப்புகளை உடனடியாகத் தொடங்குமாறு, அல் முனீறா பாடசாலை சமூகத்தினர் குரலெழுப்பத் தொடங்கினர்.
இது இவ்வாறிருக்க மேற்படி கட்டடங்களை அமைப்பதற்காக அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் – தனது காணியை வழங்கியுள்ள நிலையில், குறித்த நோக்கத்தை நிறைவேற்றாமல் போனால், பள்ளிவாசலுக்கு காணி மீளளிக்கப்பட வேண்டும் என, பள்ளிவாசல் எழுத்து மூலம் நிபந்தனை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, குறித்த காணியை அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்ட அல் முனீறா பாடசாலையானது, ஒவ்வொரு வருடமும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கு ஒரு தொகை நிதியை வழங்க வேண்டுமெனவும் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்த போதும், தற்போதைய அதிபர் கடமையேற்றதன் பின்னர், அல் முனீறா வித்தியாலயத்திடமிருந்து, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கு – குறித்த காணியின் நிமித்தம் எவ்வித நிதியும் கிடைக்கவில்லை என, பெரிய பள்ளிவாசல் தலைவர் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில் பாவங்காய் வீதியை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி கட்டடங்களுக்கு பாதுகாவலர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுகன்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மதுல்லா ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்தார்.



தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலையின் ஆரம்பப் பிரிவை, புதிய இடத்துக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு உத்தரவு: ‘புதிது’ செய்திக்கு பலன்



