அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலையின் ஆரம்பப் பிரிவை, புதிய இடத்துக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு உத்தரவு: ‘புதிது’ செய்திக்கு பலன்

🕔 July 28, 2022

– அஹமட் –

ட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் ஆரம்பப் பிரிவை, புதிய இடத்துக்கு உடனடியாகக் கொண்டு செல்லுமாறு – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மதுல்லாஹ் பாடசாலை அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தகவலை அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாரி – ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.

அல் முனீறா பெண்கள் பாடாசாலையின் ஆரம்பப் பிரிவை புதிய இடத்துக்குக் கொண்டு செல்வதற்காக, பாவங்காய் வீதியை அண்மித்து – பல கோடி ரூபா அரச நிதியில் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், அங்கு ஆரம்பப் பிரிவை கொண்டு செல்வதில் அல் முனீறா பெண்கள் பாடசாலையின் அதிபர் இழுத்தடிப்புகளை செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆரம்பப் பிரிவுக்கான புதிய இடத்தில் 02 கோடியே 60 லட்சம் ரூபா செலவில் புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு நீண்ட காலமாகியுள்ள போதும், ஆரம்ப பிரிவை கொண்டு செல்வதற்கான உரிய நடவடிக்கையினை அதிபர் எடுக்காமல் தட்டிக் கழித்து வந்தார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த 06 மின் விசிறிகள் அண்மையில் களவாடப்பட்டன.

இது குறித்து செய்தி வெளியிட்ட ‘புதிது’ செய்தித்தளம்; ஆரம்பப் பிரிவை புதிய இடத்துக்குக் கொண்டு செல்வதில் இழுத்தடிப்புகள் உள்ளமையை சுட்டிக்காட்டியதோடு, உடடியாக புதிய இடத்துக்கு ஆரம்பப் பிரிவைக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தது.

இதனையடுத்து, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர், அல் முனீறா பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று (27) சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது – புதிய இடத்துக்கு ஆகக்குறைந்தது ஒரு வகுப்பையேனும் முதற் கட்டமாக கொண்டு செல்லுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் உத்தரவிட்டதாகவும் கல்விப் பணிப்பாளர் கஸ்ஸாலி கூறினார்.

மேலும் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஆரம்ப பிரிவு மாணவர்களை புதிய இடத்தில்தான் சேர்க்க வேண்டுமென – வலயக் கல்விப் பணிப்பாளர் பணித்துள்ளதாகவும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் கஸ்ஸாலி ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

பெரிய பள்ளிவாசல் வழங்கிய காணி

அல் முனீறா பாடசாலையின் ஆரம்பப் பிரிவை – புதிய இடத்துக்குக் கொண்டு செல்லும் பொருட்டு தற்போது புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணி – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலினால் அன்பளிப்புச் செய்யப்பட்டதாகும்.

இந்தக் காணியின் தற்போதைய பெறுமதி 05 கோடி ரூபா வரை செல்லும் என அறிய முடிகிறது.

குறித்த காணியை அல் முனீறா வித்தியாலயத்துக்கு பெரிய பள்ளிவாசல் அன்பளிப்புச் செய்து எழுதிய ஆவணத்தில், அந்தக் காணி – வழங்கப்படும் நோக்கம் நிறைவேற்றப்படவில்லையாயின், மீண்டும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கு காணி கையளிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக, அல் முனீறா பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் முன்னாள் நிருவாக உறுப்பினர் ஒருவர் ‘புதிது’க்கு கூறினார்.

அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் ஆரம்பப் பிரிவை, புதிய இடத்துக்குக் கொண்டு செல்வதற்காகவே – குறித்த காணியை அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை அல் முனீறா வித்தியாலய ஆரம்ப பிரிவுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திலிருந்த மின் விசிறிகள் களவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்