
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ‘லங்காதீப’ தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அரச தொலைக்காட்சியான சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ஐடிஎன்) மற்றும் ஏனைய தொலைக்காட்சி அலைவரிசைகளுடன் இணைந்து விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவிருந்தது.
எனினும், ஜனாதிபதி நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்ததையடுத்து நேரடி ஒளிபரப்பு தடைபட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
மின்சாரம் துண்டிக்கப்படும் போது, வழக்கமாக சம்பவம் நடந்த இரண்டு முதல் மூன்று வினாடிகளுக்குள் மின் பிறப்பாக்கிகள் (ஜெனரேட்டர்கள்) இயக்கப்படும். ஆனால் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் குறைந்தது 10 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபட்டது.
இதனால், ஜனாதிபதி பதவியேற்பு விழாவை நேரலையில் ஒளிபரப்ப அரச தொலைக்காட்சியால் முடியவில்லை.



