
அனுரகுமார திஸாநாயக்க – ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் என, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார்.
புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனு கோரல் எதிர்வரும் 19 ஆம் திகதியும் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு 20 ஆம் திகதியும் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி இதுவரையில் நான்கு பேர் – ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் டலஸ் அலகபெரும மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியோரே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தன்னை தெரிவு செய்தால் ஜனாதிபதிக்கான போட்டிக் களத்தில் தானும் களமிறங்கத் தயார் என, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



