தலைப்புச் செய்திகள்

நாட்டுக்காக எதிர்காலத்திலும் பாடுபடப் போவதாக கோட்டா தெரிவிப்பு

நாட்டுக்காக கடந்த காலங்களில் தான் செய்த பணிகளைப் போன்று எதிர்காலத்திலும் நாட்டுக்காக பாடுபடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கான அவரின் கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மேற்படி ராஜிநாமா கடித்தத்தை இன்று (16) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க வாசித்தார்.

அதில், 2019 நொவம்பர் 18ஆம் திகதி இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட தாம், பதவிக்கு வந்த மூன்று மாத காலத்திலேயே, நாடு கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எனினும் அந்த கொரோனா தொற்றில் இருந்து நாட்டைப் பாதுகாத்தமை தொடர்பில், தான் மகிழ்ச்சி அடைவதாக கோட்டாபய ராஜபக்ஷ தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 

இந்த வகையில், நாட்டை முன்கொண்டு செல்ல சர்வ கட்சிகள் அடங்கிய அரசாங்கமொன்றை அமைத்து முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தான் கடந்த காலங்களில் தாய் நாட்டுக்காக செய்த சேவை போன்று, எதிர்காலத்திலும் தாய் நாட்டுக்காக சேவை செய்வதற்கு விருப்பம் கொண்டிருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.