தலைப்புச் செய்திகள்

எனது தந்தை நாட்டை விட்டு தப்பியோட மாட்டார்; எம்.பியாக இருந்து அவருக்கு அடுத்தவரை தெரிவு செய்வார்: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பியோட மாட்டார் என்று அவருடைய மகன் நாமல் ராஜபக்ஷ எம்.பி இன்று (10) ஏ.எப்.பி செய்தியிடம் தெரிவித்துள்ளார்.

அலறி மாளிகையை நேற்று திங்கட்கிழமை இரவு ஆத்திரமடைந்த மக்கள் முற்றுகையிட்டதை அடுத்து, ராணுவத்தினரால் மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

“நாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் உள்ளன. நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்” என்றும் கூறியுள்ளார்.

மகிந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், தனக்கு அடுத்தவரைத் தெரிவு செய்வதில் தீவிர பங்கு வகிக்க விரும்புவதாகவும் நாமல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அலறி மாளிகை நேற்றிரவு பொதுமக்களால் சுற்றி வளைக்கப்பட்டமையை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷ அடையாளம் தெரியாத இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

“எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார், அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் குடுத்தினர் திருகோணமலை கடற்படை முகாமிற்குள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து அந்த முகாமைச் சுற்றி பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.