புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் 15 பேர் மட்டும் உள்ளடக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தை நடத்துவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட புதிய அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று (16) இரவு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் தான் செயற்படுவதாகவும், அதற்கு வெளியில் தான் கால் வைக்கப் போவதில்லை எனவும் இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்க நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
பல முன்னாள் அமைச்சர்கள் தமக்கு அமைச்சுப் பதவிகள் வேண்டாம் எனவும் அதற்குப் பதிலாக இளைஞர்கள் குழுவொன்றை நியமிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும், இன்று (17) அல்லது நாளை பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
எனினும் சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் இந்த அமைச்சரவையில் நியமிக்கப்பட மாட்டார்கள் என தெரியவருகிறது.
காமினி லொகுகே, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டார்கள் என வட்டாரங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.



