தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி, கல்முனை கிறிஸ்தவ மக்கள் ஆர்ப்பாட்டம்

– பாறுக் ஷிஹான் –

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும், இது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து, கல்முனை இருதயநாதர் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்னால், கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள், கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்றினை  ஞாயிற்றுக்கிழமை (17) ஆராதனையின் பின்னர் மேற்கொண்டனர்.

இக்கவனயீர்ப்பு போராட்டமானது  கல்முனை இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தன் தேவதாஸன்  தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்  கலந்து கொண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி, ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

‘கர்தினாலின் குரலுக்கு செவிசாயுங்கள்’, ‘இனவாதம் காட்டி உறவுகளை பிரிக்காதீர்கள்’, ”இறந்து போனவர்களுக்கு நீதி வேண்டும்’, ‘இனவாதம் காட்டி எங்களை பிரிக்காதீர்கள்’,’பயங்கரவாதத்தினை நிறுத்துங்கள்’, ‘அரசன் அன்று கொல்வான் இறைவன் நின்று கொல்வான்’  உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்கள் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.    

இதன்போது பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 03 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்றைய ஈஸ்டர் தினத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.