சம்பளம் வழங்க பணம் இல்லை; 06 மாதங்களுக்கு திறைசேரியிடம் உதவி கோருகிறது ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம்

🕔 March 15, 2022

லங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் – தொலைக்காட்சி நிலையத்தில் கடமையாற்றுவோருக்கான சம்பளம் மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளை ஈடு செய்வதற்காக, 06 மாத காலத்துக்கு திறைசேரியில் இருந்து 240 மில்லியன் ரூபாவினை வழங்குமாறு, அந்தக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், தமது ஊழியர்களின் சம்பளம் மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஈடுசெய்யும் வகையில் இந்தத் தொகை கோரப்பட்டுள்ளது.

தமது வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், சம்பளம் வழங்குவதற்கும் அத்தியாவசிய செலவுகளை ஈடு செய்வதற்கும் அது போதுமானதாக இருக்காது என, ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் திறைசேரிக்கு அறிவித்துள்ளது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வருமானத்துக்கும் செலவுகளுக்கும் இடையில் மாதாந்தம் சுமார் 65 மில்லியன் துண்டு விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் சுமார் 862 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு மாதாந்தம் சம்பளம் வழங்குவதற்காக 90 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது.

இதேவேளை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 5,000 ரூபா ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவாக செலுத்தப்படுகிறது. இதற்காக மாதாந்தம் சுமார் 4.4 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்