ஜனாதிபதியின் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ஹிருணிகாவின் வீட்டுக்கு எதிரே, நேற்றிரவு ஒரு குழு ஆர்ப்பாட்டம்

🕔 March 6, 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மாலபேயிலுள்ள வீட்டுக்கு முன்பாக நேற்று (05) இரவு ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிருணிகா தலைமையிலான ‘சமகி வனிதா பலவேகய’ நேற்று மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த சில மணி நேரங்களின் பின்னரே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மின்வெட்டு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி சமகி வனிதா பலவேகய அமைப்பு போராட்டம் ஒன்றை நடத்தியது.

நேற்று பிற்பகல் மிரிஹான சந்திக்கு அருகாமையில் இருந்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் ஜனாதிபதியின் இல்லம் வரை சென்று, போராட்டத்தில் ஈடுபட்டோர் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இந்தப் போராட்டம் நடந்து சில மணி நேரங்களிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தனது முகநூல் காணொளியில்; ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களை தனது வீட்டுக்கு வெளியே அனுப்புவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தனக்குத் தெரியவந்துள்ளதாக கூறியிருந்தார்.

தனது மூன்று சிறு குழந்தைள் வீட்டுக்குள் இருப்பதாகவும், அந்த ஆர்ப்பாட்டக் கும்பல் தனது குழந்தைகளுக்கு அல்லது வீட்டுக்கு சிறிதளவு சேதத்தை ஏற்படுத்தினாலும், ஜெனிவா போன்ற சர்வதேச சமூகத்தின் முன் இந்த விஷயத்தை எடுத்துச் செல்ல தயங்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஹிருணிகாவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்; “ஜனாதிபதியின் வீட்டின் முன்பாக வன்முறையை வெளிப்படுத்திய பெண்ணே வெளியே வா” என போராட்டக்காரர்கள் கோஷமிட்டதுடன், கூச்சல் இட்டு குழப்பம் விளைவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இல்லம் முன்பாக ஹிருணிகா தலைமையில் போராட்டம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்