தமிழைத் தமிழாக உச்சரிக்கும் சிறப்பு, ஈழத்தில் முஸ்லிம்களுக்கே உண்டு: சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

🕔 February 21, 2022

– ஜெஸ்மி எம். மூஸா –

தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தாய் நம் முதல் ஆசான் என்றொல்லாம் நமது இலக்கியம் பேசும் அத்தாயினை மகிமைப்படுத்த வந்ததே தாய்மொழி தினமாகும்.

தாய், தாய் நாடு, தாய் மொழி இவற்றினை நேசிப்பது தாய் வழி பேசும் மனித இனத்தின் முதற் கைங்கரியமாகும்.

மனித ஆற்றலை மேம்படுத்தவும் ஒருவரது படைப்பாற்றலை அதிகப்படுத்தவும் தாய்மொழிக் கல்வியால் மட்டுமே முடியும் என்பது அறிவியல் ஆய்ந்த உண்மையாகும். மனிதனது சிந்தனைத் திறனுக்கும் தாய்மொழிக்கும் தொடர்புண்டு. தாய்மொழியிலேயே ஒருவர் அதிகம் சிந்திக்க முடியும் என்றவாறான கருத்துக்கள் தாய்மொழியின் மேன்மை குறித்து எழுந்துள்ளன.

தாய் மொழியில் அறிவியல் கல்வியைக் கொடுப்பதன் மூலம் ஆக்கபூர்வமான சிந்தனையைக் குழந்தைகள் மத்தியில் உருவாக்க முடியும் என இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். தாய்மொழியின் சிறப்புக் குறித்து முன்வைக்கப்பட்ட இக் கருத்துக்கள் தாய்மொழியின் அவசியத்தை நோக்கி உலகைச் சிந்திக்கவும் திசை திருப்பவும் வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் பெப்ருவரி 21 ஆம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாகப் பிரகடனம் செய்துள்ளது.

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் 1952 இல் மொழிப் பாதுகாப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. அப்போராட்டத்தில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர். இது பெப்ருவரி 21 இல் நடந்தது. மொழிக்காக முதன் முதலில் உயிர்நீர்த்த இத்தினத்தை சர்வதேச தாய்மொழி தினமாக ஆக்க வேண்டுமென வங்கதேச அறிஞர் ராஃபிக்குல் இஸ்லாம் – ஐ.நா வுக்கு கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கைக்கு யுனெஸ்கோ நிறுவனம் 2000 ஆம் ஆண்டு கொடுத்த அங்கீகாரமே சர்வதேச தாய்மொழி தினமாகும்.

தாய்மொழியில் கல்வி பயிலும் குழந்தைகளே ஆழமாகக் கற்கிற்கின்றனர், கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டுமாயின் தாய்மொழிக்கல்வியை ஆதரிக்க வேண்டும் முதலிய விடயங்கள் அடங்கிய கோவையொன்றை வெளியீடு செய்து யுனெஸ்கோ தாய்மொழி தினத்தை பிரகடனம் செய்தது.

தாய் மொழியினை மறந்து அதன் சிறப்பினைப் பேணாத நிலையில் உலகில் இருந்த ஆறாயிரத்துக்கும் அதிகமான மொழிகளில் 50 வீதமானவை வழக்கொழுந்து வருவதாக ஆய்வொன்று குறிப்பிடுகிறது.

தாய் மொழியைப் பேணி வருபவர்களில் தமிழ் மொழி பற்றாளர்களே அதிகம் எனக் கூறப்படுகிறது. உலகிலுள்ள மொழிகளில் நீண்ட பாரம்பரியமும் கலைப்பண்பும் உள்ள மொழியாக இருந்து செம்மொழிக்கான அந்தஸ்த்து தமிழ் மொழிக்கு உள்ளமையும் இவ்வாறான தன்மைகளால் என்பது திண்ணமாகும்.

நமது நாட்டில் பிற மொழிக் கற்கையின் வீச்சு அதிகரித்து வருகிறது. பிறமொழிக் கற்கை தேவையான போதிலும் தாய்மொழிக் கல்வி அவசியமானது. அத் தாய்மொழியானது குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டப்பட வேண்டும் என்ற கருத்து நிலைத்தோங்குகிறது. சாம்கி என்ற மேலைத்தேய மொழியியலாளர் ‘குழந்தைகள் மனதளவில் எவ்விதத் தொல்லையும் இல்லாமல் ஒரு மிதி வண்டியைப் பழகுவது போல் தாய் மொழியை எளிமையாகக் கற்றுக் கொள்கிறார்கள்’ எனக் குறிப்பிடுவது குழந்தைப் பருவ தாய்மொழி ஊட்டலின் அவசியத்தை எடுத்தியம்புகிறது.

தாய் மொழியில் கற்றவர்களே கண்டு பிடிப்பாளர்களாகவும் ஆய்வாளர்களாகவும் பரிணமிக்கின்றனர் என்பது மொழி ஆய்வின் முடிவாகும். தாய் மொழிகண். இதர மொழிகள் கண்ணாடி என்ற கருத்தும் தாய் மொழி தொடர்பில் முன்வைக்கப்படுகிறது. கண்ணாடியை மாற்றலாம். வேண்டிய விதங்களில் பெறலாம். இன்பமும் அடையலாம். ஆனால் கண்ணை மாற்றி அவ்வாறான இன்பங்களைப் பெற்றுக் கொள்ளமுடியாது. இதனால்தான் தாய் மொழியின் மாறாத தன்மை முக்கியம் எனக் கூறப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மறைமலையடிகள் ஆரம்பித்த தனித்தமிழ் இயக்கம், வரலாற்றுக் காலங்கள் முதலே தமிழ் இலக்கியத்திற்கென புலவர்களும் மன்னர்களும் ஆற்றிய பங்களிப்புக்கள் எல்லாமே, தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர வைக்கின்றன.

‘தமிழுக்கு அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர’ என்று பாடிச் சென்ற பாரதிதாசனின் வரிகள் நம் உள்ளங்களை உசுப்பும் போது – தமிழின், தாய்த்தமிழின் உணர்வும் மேன்மையும் பீறிட்டு ஓடும். 

ஐரிஸ் நாட்டறிஞர் வோலரா குறிப்பிடும் போது ‘ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் அதற்குப் பெரும் படை பலம் தேவையில்லை. அந்நாட்டின் தாய்மொழியை சிதைக்கத் தொடங்கினால் போதும்’ என்கின்றார். இக் கூற்று அதிக சிந்தனைக்குரியது.

பொருளாதாரத்தாலும் அரசியலாலும் மற்றும் இதர அம்சங்களாலும் ஒன்றிணைக்க முடியாததை, தாய்மொழி செய்கிறது.
எப்பிரதேசங்களில் எல்லாம் ஒருமைப்பாடுடன் ஒரு மொழியைப் பேசுகின்றோமோ, அவர்கள் எல்லோரும் அம்மொழியின் குழந்தைகள். அக் குழந்தைகளுக்கிடையே இருக்கும் அன்பு, பரஸ்பரம், இனிமை என்பன பரிமாறப்பட வேண்டும். அவ்வகையில் தமிழ்த் தாயின் பிள்ளைகள் இன்று உலகின் மூலை முடுக்கெல்லாம் பரந்து வாழ்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரு தாயின் மக்கள் என்பதால், தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் தமிழர்களே. அவர்களை எவ்வித கோட்பாடுகளும் கொள்கைகளும் பிரித்து விட முடியாது.

நமது தாயாகிய தமிழைப் பாதுகாத்து அதன் இயல்புகளுடன் எதிர்கால சந்ததியினருக்கும் பரிமாற்றம் செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் கடமையாகும். நமது நாட்டில் தாய் மொழிக் கல்விக்கான சுதந்திரம் வழங்கப்பட்டுக் கொண்டே வருவது சிறப்பம்சமாகும்.

தமிழை தமிழாக உச்சரிக்கும் சிறப்பு ஈழத்து முஸ்லிம்களுக்கே உண்டு என்பதும் தாய் மொழி தினத்தின் முக்கிய செய்தியாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்