தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

🕔 February 12, 2022

– மப்றூக் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நிறைவு செய்திருக்கிறது. 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது 27 வயதாகிறது.

பல்கலைக்கழகமொன்று அமைந்திருக்கும் இடம், அங்கு பெரும்பான்மையாக வாழும் சமூகம் ஆகியவை, அந்தப் பல்கலைக்கழகத்தின் முகமாக அமைந்து விடுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் சமூதாயத்தின் முகமாகத் தெரிவது போல், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம் சமூகத்தின் முகமாகவே அடையாளம் பெற்றுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்னாள் அமைச்சர் அஷ்ரப்பின் பெரும் முயற்சியினால் உருவானதாகும். இந்தப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது, எதையெல்லாம் அது சாதிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு முஸ்லிம் சமூகத்திடம் இருந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக – வெள்ளி விழாவைக் கடந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இன்னும் அவற்றினைச் சாதிக்கவில்லை.

எழுதப்பட வேண்டிய முஸ்லிம்களின் வரலாறு

இலங்கையில் முஸ்லிம்களின் பூர்வீகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானவை என்று சொல்லப்பட்டாலும் கூட, ஆய்வுகள் அடைப்படையில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. இந்தக் குறையை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நிவர்த்திக்கும் என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது. ஆனால், அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

கட்டார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றும் கலாநிதி தீன் முகம்மட், 2009ஆம் ஆண்டு வழங்கிய நேர்காணல் ஒன்றில்; “தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினை ஆய்வு செய்வதற்கானதொரு நிலையமாகவும் இதைப் பயன்படுத்தலாம் என்கிற நம்பிக்கை பலரிடம் இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரசியலும், கல்விக்கு அப்பாலான ஏனைய பல விடயங்களும் ஊடுருவியுள்ளதால் அந்தப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மிகவும் தடைப்பட்டுப் போயுள்ளது. இதனால், மேற்சொன்னவாறான ஆய்வுகளை அங்கு நடத்த முடியாமலுள்ளது.

எவ்வாறிருந்தபோதும், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – காத்திரமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என்கிற நம்பிக்கை இன்னும் நம்மிடம் இருக்கவே செய்கிறது. அவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ளப் பொருத்தமான பல்கலைக்கழகம் இதுதான். எனவே அதற்கான முயற்சிகளை தெ.கி.பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறியிருந்தார். (முழுமையான நேர்காணலை இங்கு அழுதுவதன் ஊடாக காணலாம்)

ஆனால், அது இன்னும் நடந்தபாடில்லை.

அழியும் இலக்கியமும், பல்கலைக்கழகத்தின் அலட்சியமும்

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நாட்டார் பாடல்களுக்கு தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடமுண்டு. இந்தப் பாடல்களை வாய்வழி இலக்கியம் என்பார்கள். கிழக்கு முஸ்லிம்களின் நாட்டார் பாடல்களை எழுத்துருவில் தொகுத்து சிலர் புத்தகங்களாக்கியுள்ளனர். கவிஞர் எஸ். முத்துமீரான், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் போன்றோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

முஸ்லிம் நாட்டார் பாடல்களுக்கென்று சில மெட்டுகள் உள்ளன. அந்தப் பாடல்களைத் தொகுத்து நூல் வடிவில் கொண்டு வந்தாலும், அவற்றினை வாசிப்போர் அப் பாடல்களின் மெட்டுக்களை அறிய வாய்ப்பில்லை.

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்களை இன்னும் பாடக்கூடியோர் ஒரு சிலரே உயிருடன் உள்ளனர்.

இந்த நிலையில், இந்தப் பாடல்களைப் பாடுகின்றவர்களைச் சந்தித்து அவர்களைப் பாடவைத்து, அவற்றினை ஒலி, ஒளி வடிவில் பதிவு செய்து வைப்பதன் மூலமாகத்தான், நாட்டார் பாடல்களை இனி வரும் சந்ததியினருக்கு அதன் உயிர்த்தன்மையுடன் அறிமுகம் செய்து வைக்க முடியும்.

ஆனால், இதனைக் கூட தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இது வரை செய்யவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயமாகும். இது தொடர்பில் அங்குள்ள பேராசிரியர் ஒருவருடன் பேசியபோது, இதனைச் செய்வதற்கான வசதிகள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்குச் செய்து கொடுக்கப்படவில்லை என்கிறார். மேற்சொன்ன விடயத்தை இப்போதுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒரு கைத் தொலைபேசியிலேயே செய்து முடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய நீதிபதி ஏ.எச்.எம். திலீப் நவாஸ்; ” தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஸ்ரப், அங்கு சட்டபீடத்தை நிறுவி – தான் விரிவுரையாளராக கடமையாற்ற வேண்டும் எனும் கனவை தன்னுள் வைத்திருந்தார்” எனத் தெரிவித்தார். எவ்வளவு அழகான கனவு.

காற்றில் பறக்கும் கனவுகள்

ஆனால், அதற்கான அருகதையை 25 வருடங்கள் கடந்த பின்னரும் இந்தப் பல்கலைக்கழகம் அடையவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகவும் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வசதிகள் உள்ளன. வெளிவாரி மாணவர்களிடம் ஒவ்வொரு தடவையும் அறவிடப்படும் கட்டணமே கோடிக் கணக்கான ரூபாய்களாகும். இப்படி பெருந்தொகைப் பணத்தை அறவிடும் இவர்கள் – அந்த மாணவர்களுக்கான பட்டப் படிப்புகளை உரிய காலப்பகுதியில் முடிக்காமல், ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கியுள்ளனர்.

உதாரணமாக, 2015ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் 03 வருட பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக பதிவு செய்த மாணவர்களுக்கு இப்போதுதான் இரண்டாம் வருடம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு வருடப் படிப்புக்காக 07 ஆண்டுகளை இந்தப் பல்கலைக்கழகம் விழுங்கியுள்ளது. இன்னும் ஒரு வருடப் படிப்பை நிறைவு செய்தால்தான் பட்டம் கிடைக்கும். இதற்கு எத்தனை ஆண்டுகள் இழுபடுமோ தெரியவில்லை. ஆக, மூன்று வருடத்தில் முடிக்க வேண்டிய ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சுமார் 10 வருடங்கள் தேவையாக உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் மிக மோசமான நிர்வாகச் சீர்கேடுகளும், அங்கு நிலவும் ஊழல் மோசடிகளுமே இதற்கான பிரதான காரணங்களாகும்.

இந்த லட்சணத்தில்தான், இந்தப் பல்கலைக்கழகத்தில் புதிய உவேந்தராக அண்மையில் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் பதவியேற்றுள்ளார். அவர் நம்பிக்கை தரும்படியாக பல விடயங்களைப் பேசி வருகின்றார். செயல் வடிவிலும் காட்டினால் நல்லது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மீது – மிக மோசமான விமர்சனங்கள் உள்ளன. கடந்த காலங்களில், உயர் கல்வி அமைச்சராக இருந்தவரே, இந்தப் பல்லைக்கழகத்தை நாடாளுமன்றில் கடுமையாக விமர்சித்த கதையெல்லாம் நாம் அறிவோம்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு உபவேந்தரும் இருந்த காலங்களுக்கு ஒவ்வொரு பெயர் உள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.எம்.எம். இஸ்மாயில் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்த காலப் பகுதியில்தான் மிக அதிகமான அபிவிருத்திகள் நடந்தன. அதேபோன்று, மிக அதிகமான ஊழல் மோசடிகளும் அவரின் காலத்தில்தான் நடைபெற்றன.

பிறகு வந்த உபவேந்தர் எம்.எம்.எம். நாஜிம் காலத்தில் – ஊழல் மோசடிகள் வெகுவாகக் குறைந்தபோதும், அவரின் பதவிக் காலம்தான் இந்தப் பல்கலைக்கழகத்தின் ‘மந்தமான’ காலமாக இருந்தது. அவர் ‘தூய்மைவாதம்’ பேசிக்கொண்டே இந்தப் பல்கலைக்கழகத்தில் தனது பதவிக் காலத்தை ஓட்டினார். அங்கு தனக்கு எதிரானவர்களை முகம் கொள்வதற்காக தன்னைச் சுற்றி ஒரு அணியை உருவாக்கினார். அந்த அணியின் மிகக் குறிப்பிடத்தக்க ஒருவராக இருந்தவர்தான் தற்போதைய உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக ரமீஸ் பதவியேற்றுள்ளார். ‘வாயால் வடை சுட முடியாது’ அல்லது ‘வடைகளை வாயால் சுடுவதில்லை’ என்பதை அவர் மிக நன்றாகவே அறிந்திருப்பார். எனவே, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய அஷ்ரப்பின் கனவுகளோடு, அவருடைய சமூகம் சார்ந்த கனவுகளையும் மெய்ப்பட வைக்க, களத்தில் இறங்கினால் மட்டும்தான் காரியங்கள் ஆகும்.

‘கனவுகள் பலிக்குமா’ என்கிற அமங்கலமான கேள்வியோடு இதனை நாம் முடித்து வைக்க விரும்பவில்லை.

பலிக்கும் என நம்புவோம்.

Comments