சஹ்ரானுடன் தன்னை தொடர்புபடுத்தி தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிராக, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் முறைப்பாடு

🕔 October 27, 2021

ரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (27)அறிவித்துள்ளனர்.

முன்னணி கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி நேற்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற இணையத்தள மாநாட்டில், அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோ 2019 ஈஸ்டர் தின தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்ததாக சுரேஷ் சாலி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமுக்கு, இலங்கையின் புலனாய்வுப் பிரிவு – நிதி மற்றும் பிற உதவிகளை வழங்கியதாக அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோ அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

அப்போது பிரிகேடியராக இருந்த தான் (சுரேஷ் சாலி), சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது ஆதரவாளர்களை வளர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டதாக அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோ விவரித்ததாகவும் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கூறியுள்ளார்.

தன்னை இழிவுபடுத்தும் நோக்கில் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி, இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார்.

மேலும் இணைய மாநாட்டில் பங்குபற்றிய அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தனது முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்