முஸ்லிம்கள் தொடர்பில் இந்தியாவுக்கு எந்தக் கரிசனையும் இல்லை: ஹாபிஸ் நசீர் எம்.பி குற்றச்சாட்டு

🕔 October 11, 2021

முஸ்லிம்களின் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும்  அபிலாஷைகள் தொடர்பான  விடயங்களில், இந்தியா தொடர்ந்தும் இரட்டை முகத்துடன் செயற்படுவதாக, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்த காலம்தொட்டு இந்நிலைமைகள் நீடித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான அபிலாஷைகளை  பகிர்ந்துகொள்வதற்கு சாத்தியமான தெரிவைத் தேட வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கையின் அரசியல் பிரச்சினையில், தமிழர்களுக்குச் சம அளவிலான இழப்புக்கள் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. உயிரழிவு, இடப்பெயர்வு, சொத்துச் சேதம் எல்லாம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்தான். 

எனினும், தமிழர்களுக்கு தீர்வு கிடைப்பதற்கு மட்டுமே இந்தியா அதிக அக்கறையுடன் செயற்படுகிறது. அரசியலமைப்பின் 13 ஆவது, திருத்தமூடாக மாகாண சபை முறைமைகளை அறிமுகப்படுத்தியதும் இந்தியாதான்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களும் இந்தியாவின் அழுத்தத்துடன்தான் இணைக்கப்பட்டன.

இந்த நிலைமைகளால், முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்கள் பற்றி எந்தக் கரிசனையும் இந்தியாவுக்கு இருக்கவில்லை.

மேலும், இவ்விடயங்களில் முஸ்லிம்களின் அபிலாஷைகள், ஆதங்கங்கள் பற்றி எந்தக் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டதும் கிடையாது.

இது மட்டுமில்லை, இலங்கைக்கு வரும் இந்திய உயர் அதிகாரிகள் எவரும், முஸ்லிம் அரசியல் தலைவர்களையோ அல்லது சிவில் சமூகப் பிரதிநிதிகளையோ சந்திப்பதும் இல்லை.

அண்மையில் கூட இலங்கைக்கு  வந்த இந்திய வெளிவிவகார செயலாளர்  ஸ்ரீஹார்ஸ் வர்தன் சிரிங்லா (Shri Harsh Vardhan Shringla) கூட எந்த முஸ்லிம் அரசியல்வாதிகளையும் சந்திக்கவில்லை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமை கூட  சந்திப்பதில் இவர் நாட்டம் காட்டவில்லை.

இதனால், இந்தியா குறித்த நம்பிக்கையை முஸ்லிம்கள் இழந்து வருகின்றனர்.

ஐரோப்பா, அமெரிக்கா போன்ற சக்திகள் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் செல்வாக்கில்தான் இலங்கை விடயத்தை அணுக முயற்சிக்கின்றன.

தமிழ் கட்சிகளோ அல்லது தலைமைகளுமோ முஸ்லிம்கள் விடயத்தில் மாற்றாந்தாய் மனநிலையுடன்தான் செயற்படுகின்றன.

இதனால்தான், சம அளவிலான நியாயங்களைப் பெற அல்லது சந்தர்ப்பங்களைப் பெறும் சூழலுக்காக வேறு சாத்திய வழிகளை முஸ்லிம்கள் தேட நேரிட்டுள்ளது.

இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்கள் எழுபது வருடங்களாக ஓரங்கட்டப்படுவதனால், இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்காமல் உள்ளது. இது இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்குரிய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது என்ற யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

(நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்