அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் கைதிகளின் நிலைமை: நாடாளுமன்றில் உரையாற்றிய சாணக்கியன் தகவல்களை வெளியிட்டார்

🕔 October 7, 2021

னுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில் நாங்கள் சந்தித்து பேசியிருந்தோம்.

நாங்கள் அவர்களை சந்தித்து பேசும் போது, அவர்கள் அமர்வதற்கு கதிரைகள் கூட வழங்கப்படவில்லை. எனினும் நாங்கள் வலியுறுத்தி அவர்கள் அமர்ந்து பேச கதிரைகளை பெற்றுக்கொடுத்தோம்.

அவர்களை நாங்கள் சந்தித்து பேசும் போது, சிறைச்சாலை ஊழியர்களும் அருகில் இருந்தமையினால் பல விடயங்களை பேச முடியவில்லை. எனினும் அவர்கள் தங்களை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எங்களிடம் வேண்டிக் கொண்டனர்.

ஆனால் தன்னிடம் அப்படி அவர்கள் கூறவில்லை என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் அவர்கள் எங்களிடம் அதனைத் தெரிவித்தார்கள். அதேபோன்று நடைபெற்ற சம்பவத்துக்கு நீதிஅமைச்சர் மன்னிப்பு கோரியமையினை நாங்கள் வரவேற்கின்றோம்.

இதேவேளை, அண்மையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் இல் பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரின் விடுதலைக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்