சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன்

🕔 September 23, 2021

– மரைக்கார் –

பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், அண்மையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தேவையற்ற விதத்தில் குற்றஞ்சாட்டி மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேற்றைய தினம் சபையில் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்.

அத்தோடு ஞானசாரரின் கருத்துக்கு எதிராக எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் கருத்துக்களை வெளியிடாமை குறித்தும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் செயற்பாடுகளும், கருத்துக்களும் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலானதொரு உறவை அவாவி நிற்பதனை அவதானிக்க முடியும்.

முஸ்லிம்களுக்காக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச வேண்டிய தருணங்களில், முஸ்லிம்களுக்காக சாணக்கியன் எம்.பி நாடாளுமன்றில் பேசியதையும், அப்போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனித்திருந்தமையினையும் நாம் பல தடவை கண்டிருக்கின்றோம்.

அதேபோன்றுதான் நேற்றைய தினம் தனது நாடாளுமன்ற உரையில், ஞானசார தேரர் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் இழிவாகப் பேசியமையினைக் கண்டித்து சாணக்கியன் எம்.பி பேசியிருந்தார்.

ஞானசார தேரரின் பேச்சு காரணமாக நொந்து போயிருந்த முஸ்லிம்களுக்கு சாணக்கியனின் உரை ஓர் ஒத்தடமாக அமைந்துபோனதால், சாணக்கியனுக்கு முஸ்லிம் மக்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையானது சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் கடுமையான சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ‘நானும் ரௌடிதான்’ என்கிற பாணியில், “நாங்களும் ஆளுந்தரப்பு எம்.பிதான்” என்று சொல்லிக் கொண்டிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு – சாணக்கியனின் உரை, தாங்க முடியாத எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதை, அவர்களின் அடிமைகள் – சமூக வலைத்தளங்களில் எழுதுவதை வைத்துப் புரிந்து கொள்ள முடியும்.

அதிலும் சாணக்கியன் எம்.பியை முஸ்லிம்களின் துரோகியென்றும், முஸ்லிம்களை உசுப்பேத்துவதற்காகவே, ஞானசார தேரரின் கருத்துக்கு சாணக்கியன் கண்டனம் தெரிவித்தார் என்றும் அக்கரைப்பற்று நாடாளுமன்ற உறுப்பினரின் சில அடிமைகள், சமூக வலைத்தளங்களில் கூச்சலிட்டு புழுதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் சுயாதீன (ஐ.ரி.என்) தொலைக்காட்சியின் ‘தீரணய’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதுதான் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான கருத்துக்களை ஞானசார தேரர் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.ரி.என் தொலைக்காட்சி – அரசுக்குச் சொந்தமானதாகும். அப்படியென்றால் முஸ்லிம்களையும் இஸ்லாத்தினையும் திட்டித் தீர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை ஞானசார தேரருக்கு யார் ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்பதை சிறு குழந்தையும் புரிந்து கொள்ளும்.

இவ்வாறான பின்னணிகளையெல்லாம் சௌகரியமாக மறந்து விட்டு, அக்கரைப்பற்று எம்.பியின் அடிமைகள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணிக்கியனைத் திட்டுவது என்ன வகை டிசைன் என்று புரியவில்லை. ஆனாலும் இது அவர்களின் புளித்துப் போன டிசைன் என்பதை, அவர்களின் அரசியலைத் தெரிந்தவர்கள் அறிந்திருப்பார்கள்.

‘முஸ்லிம்களை காரணமின்றி வம்புக்கிழுக்கும் எவரையும் நாங்கள் கண்டிக்க மாட்டோம், அடுத்தவரும் கண்டிக்கக் கூடாது’ என்று, அக்கரைப்பற்று எம்.பியின் அடிமைகள் கதறுவது; தங்கள் இயலாமையை மறைப்பதற்கான முயற்சியாகும்.

ஞானசார தேரருக்கு நேற்று சாணக்கியன் எம்.பி நாடாளுமன்றில் கண்டனம் தெரிவித்த கணமானது, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்மணமாகி நின்ற தருணமாகவும் அமைந்திருந்தது.

நாட்டில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது, “முகம்மது நபியின் காலத்திலும் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதுதான்” என்று வக்காலத்து வாங்கத் தொடங்கியதிலிருந்து – முஸ்லிம்களின் கொரோனா ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டது வரை, ஆட்சியாளர்களுக்கு சௌகரியமாகச் சொறிந்து கொடுத்துக் கொண்டிருக்கும் அக்கரைப்பற்று நாடாளுமன்ற உறுப்பினரின் நிலை என்ன என்பதை, முஸ்லிம் சமூகம் மிக நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.

இந்தப் பின்னணியில், முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசும் பிற சமூக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்களை சிலாகித்துப் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் எதிரான வசைபாடல்களை – ஒரு பைத்தியக்காரனின் கூக்குரலாகவே சமூக அக்கறையுடையோர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்பான செய்தி: ஞானசார தேரருக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்புகள் இல்லை என்றால், வாயை மூடி இருக்கச் சொல்லுங்கள்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்