ஞானசார தேரருக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்புகள் இல்லை என்றால், வாயை மூடி இருக்கச் சொல்லுங்கள்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி

🕔 September 22, 2021

ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதிக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை எனில் அவரை வாயை மூடி அமைதியாக இருக்குமாறு கூறுங்கள்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இன்று (22) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

ஜனாதிபதி வெளிநாட்டுக்கு சென்று முஸ்லிம் முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும், ஆனால் நாட்டில் நடப்பது வேறு விதமாக காணப்படுகின்றது என்வும் அவர் கூறினார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன. பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இந்தநிலையில் அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் நாங்கள் அறிகின்றோம். கடந்த காலங்களில் இவ்வாறு கோஷங்களை எழுப்பியவர்கள் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களாகவே காணப்பட்டனர்.

நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களே இவ்வாறு எதிர் கோஷங்களை எழுப்புகின்றனர். நாட்டில் பால்மாவுக்குத் தட்டுப்பாடு, நாட்டில் எரிவாயு இல்லை என்பதே கோஷங்களை நாட்டில் எழுப்புவதற்கு பிரதான காரணமாகும்.

அதேபோன்று நாட்டில் உரம் இல்லை. சீனி கொள்வனவில் மோசடி, பி.சி.ஆர் செய்வதில் மோசடி. இவற்றுக்கெல்லாம் ஜனாதிபதி, பிரதமர் மாத்திரம் காரணம் இல்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுமே காரணம்.

நாங்கள் இன்று வனஜீவராசிகள் அமைச்சு குறித்து பேசிக்கொண்டிருக்கின்றோம். வனஜீவராசிகள் ராஜாங்க அமைச்சர்தான் காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர் அம்பாறையில் காடுகளை அழித்து மரமுந்திரிகை செய்கின்றார்.

இங்குள்ள ஆளுந்தரப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மண் கொள்ளைக்கு துணை போகின்றார். தகுதி இல்லாதவர்களுக்கு ஆசனங்களை வழங்கி அவர்களுக்கு ராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்கினால் இந்த நிலைதான் ஏற்படும்.

தற்போது ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். அவரது கருத்துக்களும் அவ்வாறே உள்ளன. நாங்கள் இனவாதமாக செயற்படும் மதத் தலைவர்களுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றோம். ஜனாதிபதிக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லையெனில் அவரை வாயை மூடி அமைதியாக இருக்குமாறு கூறுகள்.

நாடாளுமன்றத்தில் முக்கிய சட்ட மூலங்களையும், திருத்தங்களையும் செய்வதற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் உதவி தேவைப்படுகிறது. ஏனைய நேரங்களில் அவர்கள் அனைவரும் கெட்டவர்களா? என கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். ஜனாதிபதி வெளிநாட்டுக்குச் சென்று முஸ்லிம் முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுகின்றார். ஆனால் நாட்டில் நடப்பதே வேறு விதமாக காணப்படுகின்றது.

ரிசாட் பதியுதீன், ஆஷாத் சாலி பேசினால் இனவாதம். ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா? நான் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இங்கு கூச்சலிடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் தனது தொகுதிக்கு வந்தால், அவரை போன்றவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும்” என்றார்.

Comments