லொஹான் ரத்வத்த விவகாரம்; ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் மூலம் விசாரணை நடைபெறும்: நீதியமைச்சர் நாடாளுமன்றில் உறுதி

🕔 September 22, 2021

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் நியமிக்கப்படுவார் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (22) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அமைச்சர் லொஹான் ரத்வத்த அண்மையில் மேற்படி இரு சிறைகளிலும் மதுபோதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தார் என்றும், செப்டம்பர் 12 அன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு தமிழ் கைதிகளை துப்பாக்கியைக் காட்டி மண்டியிட வைத்தார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த சம்பவங்கள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி; இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இது குறித்து ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்றார்.

ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயினால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் தமிழ் கைதிகளுக்கு இதன்போது அலிசப்ரி தனது மன்னிப்பை தெரிவித்தார்.

மேற்படி சம்பவங்களைத் தொடர்ந்து, அவற்றுக்குப் பொறுப்பேற்று சிறை நிர்வாகங்கள் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த விலகியமை குறிப்பிடத்கக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்