விரைவில் அமைச்சரவை மாற்றம்: வெளியுறவு, சுகாதாரம், கல்வி, உயர் கல்வித் துறைகள் கைமாறுகின்றன

🕔 August 11, 2021

மைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றங்களைச் செய்யவுள்ளார் எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கல்வி, சுற்றுலா, மின்சக்தி மற்றும் ஊடக அமைச்சர்களும் மாற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் எனவும், தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராகவுள்ள தினேஷ் குணவர்தன உயர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார் எனவும் அந்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண – சுகாதார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். அதே நேரத்தில் அவரது தற்போதைய அமைச்சு கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அமைச்சர் ரம்புக்வெல்லவின் ஊடக அமைச்சு மின்சக்தி அமைச்சராகவுள்ள டலஸ் அலகப்பெருமவுக்கு வழங்கப்பட உள்ளது.

மின்சக்தி அமைச்சு தற்போதைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கப்படவுள்ள அதேவேளை, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.

நேற்று 10ஆம் திகதி நடைபெறும் என்று ஊகிக்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு, இன்று அல்லது அடுத்த சில நாட்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மேற்படி ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்