தவிசாளர் பதவியில் இருந்து ஜெயசிறில் விலக வேண்டும்: சம்பந்தன், மாவை ஆகியோருக்கு சட்டத்தரணி அன்சில் கடிதம்

🕔 July 31, 2021

முகம்மது நபியை நிந்திக்கும் வகையில் முகநூல் பதிவை பகிர்ந்த காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கே. ஜெயசிறில் என்பவர், தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் சௌஜன்யத்தோடு வாழ்கின்ற பிரதேச சபையொன்றின் தவிசாளராக பதவி வகிப்பதற்குரிய தார்மீக உரிமையை இழந்துள்ளதாகவும், பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து, தமிழ் தேசியக் கட்சி மற்றும் தமிழரசுக் கட்சிகளின் தலைவர்களுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு விலாசமிட்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதியிட்டு மேற்படி கடிதத்தை அன்சில அனுப்பி வைத்துள்ளார்.

காரைதீவு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பான தவிசாளர் கே. ஜெயசிறில் என்பவர் முகம்மது நபியை நிந்திக்கும் வகையில் எழுதப்பட்ட பதிவு ஒன்றை, தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்றை தினம் பகிர்ந்திருந்தார். இதனயைடுத்து அவருக்கு எதிராக பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சிகளின் தலைவர்களுக்கு மேற்படி விடயம் தொடர்பில் சட்டத்தரணி அன்சில் கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த அந்தக் கடிதத்தில் அன்சில் மேலும் குறிப்பிடுகையில்;

‘எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்ததாக, அவரது புகைப்படத்தினையும் இட்டு Reginold Rgi என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்த, நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்களை நிந்தனைக்குப்படுத்தும் பதிவொன்றினை, தங்களது கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிரிஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் என்பவர் தனது Krisnapillai Jayasril எனும் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த விடயம் தொடர்பில் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

உலக மக்களுக்கு வழிகாட்டியான எமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உலகில் முதல் சிறுவர் துஸ்பிரயோகம் செய்த ஒருவர் என்று – எமது கட்சியின் தலைவர் கூறியதாக பதிவேற்றப்பட்டிருந்த அந்த முகநூல் பதிவினை பகிர்ந்தவர் ஒரு மந்த புத்திக்காரரோ, உலக அறிவற்ற ஒருவரோ அல்ல. தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் ஒரு பிரதேசத்தின் தலைமகன், அப்பிரதேச சபையின் தவிசாளர் ஆவார்.

அநியாயமான முறையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பயங்கரவாக தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, ஊடகங்கள் எதற்கும் கருத்து வெளியிட சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருக்கின்ற தலைவர் றிஷாத் பதியுதீன் கூறியதாக பதிவேற்றப்பட்டிருந்த தகவலை புத்தியுள்ள எவரும் பகிர்ந்திருக்க முடியாது.

ஆனால், பொறுப்பு வாய்ந்த பதவியிலிருக்கும் தங்களது கட்சியினை பிரிதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் இவ்வாறான பதிவினை சமூக ஊடகமொன்றில் பகிர்ந்தமை உலக முஸ்லிம்கள் அனைவரையும் கேவலப்படுத்தும், ஆத்திரத்துக்குள்ளாக்கும் விடயமாகும்.

இஸ்லாமிய அடிப்படையில் ஒவ்வொரு முஸ்லிமும் தனது தாய், தந்தை, மனைவி, மக்கள், சொத்து, சுகம் என இவ்வாறான அனைத்தையும் விட தன்னை படைத்த ஏக இறைவன் அழ்ழாஹ்வையும் அவனது இறுதி தூதர் முகம்மது நபி அவர்களையும் நேசிக்க வேண்டிய கட்டாய கடமையுள்ளவர்கள்.

அவ்வாறு முழு முஸ்லிம்களினதும் நேசத்துக்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தூற்றும் பதிவினை தங்களது கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் மேற்கொண்டமை, இரு சமூகங்களுக்கிடையிலும் பாரிய பிளவு ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்துவிடும் ஆபத்து இருப்பதை தங்களது கவனத்தின் முன் வைக்கிறேன். இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்க காத்திருக்கும் சக்திகளுக்கு தூபமிடுவதாகவே இவரது இச்செயற்பாடு காணப்படுவதோடு, அவ்வாறான சக்திகள் இவ்விடயத்தில் செயற்பட ஆரம்பித்திருப்பதனையும் தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்.

தான் அறியாமல் குறித்த தவறு நடந்தேறிவிட்டதாக தற்போது தவிசாளர் ஜெயசிறில் சமூக ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவித்தாலும், அதனை யாரும் நம்பத் தயாரில்லை என்பதனையும், சமூக ஊடகங்கள் வாயிலாக அவர் மறுத்துப் பேசிய பாங்கு இன்னும் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் வகையிலேயே காணப்பட்டதனையும் தங்களின் கவனத்திற்கு முன் வைக்க விரும்புகிறேன்.

எவ்வாறாயினும் நாட்டின் சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக அவர்மீது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் உள்ளத்தால் வருந்தி தவிசாளர் கிரிஷ்ணபிள்ளை ஜெயசிறில் முஸ்லிம்களிடம் பொது மன்னிப்பு கோருவதோடு, இரு சமூகங்களும் சுமூகமாக சௌஜன்யத்தோடு வாழ்கின்ற பிரதேச சபையொன்றின் தவிசாளராக பதவி வகிப்பதற்கான தார்மீக உரிமையை அவர் இழந்துள்ள நிலையில், அவர் பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எனவே இவ்விடயத்தில் தங்களது கட்சி சார்பில் மேற்படி நபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருத்தமான தீர்மானத்தினை மேற்கொள்வீர்கள் என எதிர்பார்ப்பதோடு, அவ்வாறான தீர்மானத்தினை தாங்கள் மேற்கொள்கையில் தங்களின் கட்சி சார்பில் காரைதீவு பிரதேச சபை விடயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களோடு சார்ந்து செயற்பட முடியும் என்பதனையும் தங்களுக்கு அறியத்தருகின்றேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்