கல்முனை உப பிரதேச செயலாளர் எனது அறிவுறுத்தல்களை கேட்பதில்லை; அரசாங்க அதிபருக்கும் முறையிட்டுள்ளேன்: பிரதேச செயலாளர் லியாகத் அலி

🕔 July 5, 2021
ஜே. லியாகத் அலி

– நூருல் ஹுதா உமர் –

ன்னுடைய அறிவுறுத்தல்களை கல்முனை உப பிரதேச செயலளர் ரி. அதிசயராஜ் கேட்பதில்லை என்றும், இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு தான் முறையிட்டுள்ளதாகவும் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி தெரிவித்தார்.

கல்முனை உப பிரதேச செயலகம் முன்பாக இன்று பகல் கிராம சேவகர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே, அவர் இதனைக் கூறினார்.

கிராம சேவகர் தாக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டம்

காணிப் பிணக்கு தொடர்பில் விசாரணைக்கு சென்ற கல்முனை உப பிரதேச செயலகத்தின் கிராம சேவகர் ஒருவரை, கடந்த வெள்ளிக்கிழமை கல்முனையை சேர்ந்த ஒருவர் தாக்கியதாக குற்றம்சாட்டி, இன்று திங்கட்கிழமை பகல் கல்முனை உப பிரதேச செயலகத்தின் முன்பாக – கிராம சேவகர்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

தாக்கப்பட்டதாக கூறப்படும் ‘கல்முனை 01 சி’ கிராம சேவகர் சந்திரகுமார் தம்பிராசா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; நீர் வடிச்சலுள்ள காணிக்கு பக்கத்தில் அமைந்துள்ள காணியின் உரிமையாளர் தன்னுடைய காணியை நிரப்பும் போது நீர் வடிச்சலையும் சேர்த்து நிரம்பியதாகவும், அப்போது வீதியால் சென்ற தான் அதை தட்டிக்கேட்டபோது, தன்னை அந்த காணிக்குரியவர் தாக்கியதாகவும் தெரிவித்தார்.

மாத்திரமின்றி இப்படியானவர்களுக்கு அரசாங்கம் முறையற்ற காணிப்பத்திரம் வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.

மேலும் இதுதொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, அதில் ஈடுபட்ட கிராம சேவகர்கள் மகஜர் ஒன்றினை உதவி பிரதேச செயலாளர் அதிசயராஜிடம் கையளித்தனர்.

இது தொடர்பில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலியை ஊடகவியலாளார்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது; ஆர்ப்பாட்டம் தொடர்பில் தனக்கு எவ்வித விடயங்களும் தெரியாது என்றும், தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை கல்முனை பொலிஸார் அன்றைய தினமே கைது செய்துள்ளதாகவும், அதன் பின்னர் அந்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தான் அறிவதாகவும் கூறினார்.

மேலும் இன்றைய ஆர்ப்பாட்டம் தொடர்பில் தனக்கு எவ்வித அறிவித்தல்களும் உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என்றும் சில நேரங்களில் உதவி பிரதேச செயலாளருக்கு அறிவித்திருக்க கூடும் என்றும் குறிப்பிட்டார்.

உப செயலாளர் தொடர்பில் முறைப்பாடு

தனக்கும் உதவி பிரதேச செயலாளருக்கும் பல வருடங்களாக புரிந்துணர்வு இருந்தும் தன்னுடைய அறிவுறுத்தல்களையோ, கல்முனை பிரதேச செயலாளராக தனக்கு முதலில் கடமையாற்றிவர்களுடைய அறிவித்தல்களையோ தற்போதைய உதவி பிரதேச செயலாளர் அதிசயராஜ் பின்பற்றுவதில்லை என்றும் பிரதேச செயலாளர் லியகாத் அலி கூறினார்.

இவ்விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் லியாகத் அலி மேலும் தெரிவித்தார்.

கிராம சேவகர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்