அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளை ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணமின்றி திரும்பும் வாடிக்கையாளர்கள்: கொரோனா அச்சுறுத்தலையும் எதிர் கொள்வதாக புகார்

🕔 July 2, 2021

– அஹமட் –

க்கள் வங்கி அட்டாளைச்சேனை கிளையில் – வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான அசௌகரியங்களை அடிக்கடி எதிர்கொண்டு வருவதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிளையின் பராமரிப்பிலுள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் உள்ளீடு செய்யப்படாமை காரணமாக, அங்கு பணம் பெற வருவோர் ஏமாற்றத்துடன் அடிக்கடி திரும்புவதை காண முடிகிறது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு முன்னர், ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் இல்லாததால், அங்கு பணம் பெற வந்த வாடிக்கையாளர்கள் – நீண்ட நேர காத்திருப்பின் பின்னர் திரும்பிச் சென்றமையினை அவதானிக்க முடிந்தது.

அதேவேளை ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் பெற வருவோர் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றும் பொருட்டு கைகளைக் கழுவுதற்காக அங்கு நீர் வசதி செய்யப்பட்டுள்ள போதிலும், சவர்க்காரம் போன்ற கிருமி கொல்லிகள் எவையும் அங்கு வைக்கப்படாமையால், வாடிக்கையாளர்கள் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்.

மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு இதற்கு முன்னரும் புகார்கள் இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்குள்ள பல ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றுகின்ற போதிலும், கிளை முகாமையாளரின் அசமந்தப் போக்கு காரணமாக, இவ்வாறான அசௌகரியங்களை வாடிக்கையாளர்கள் எதிர்கொள்கின்றனர் எனத் தெரிய வருகிறது.

தொடர்பான செய்தி: மக்கள் வங்கிக் கிளையின் அட்டாளைச்சேனை முகாமையாளர், அரசாங்க உத்தரவை தொடர்ந்தும் புறக்கணிப்பதாக பாதிக்கப்பட்டோர் புகார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்