புகைத்தல் பழக்கத்தை 48 வீதமானோர் கைவிட உதவிய கொரோனா பெருந்தொற்று: நாட்டில் நடந்த மாற்றம்

🕔 June 4, 2021

கொவிட் பரவலையடுத்து, நாட்டில் புகைப்பிடிப்பவர்களில் 48 சதவீதமானோர் இந்த பழக்கத்தை கைவிட்டுள்ளனர் என, மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

இது ஒரு நல்ல போக்கு என தெரிவித்துள்ள அந்த நிலையம், புகைப்பழக்கத்தை கைவிட்டவர்களில் சுமார் 50 சதவீதமானோர் மீண்டும் இந்தப் பழக்கத்தைத் தொடர மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையத்தின் மனித அபிவிருத்திப் பணிப்பாளர் சம்பத் டிசரம் கூறுகையில்; புகைபிடிப்பவர்கள் கொவிட் -19 நோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புகைபிடிப்பதால் தினமும் கிட்டத்தட்ட 40 பேர் இறக்கின்றனர் எனக் கூறியுள்ள அவர்; புகைபிடிப்பதைக் குறைப்பதில் இலங்கை முன்னணி நாடுகளில் ஒன்றாகும் என்றும், புகைப்பிடிப்பதைத் தடுக்க பல கொள்கைகளைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

“கடந்த ஆண்டில் சிகரெட் புகைப்பது 40 முதல் 50 சதவீதம் குறைவடைந்துள்ளதை நாங்கள் அவதானித்தோம். முந்தைய ஆண்டின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு இதுவரை 12 சதவீதம் புகைத்தல் பழக்கம் குறைந்திருப்பதையும் கவனித்துள்ளோம்.

“இது ஒரு நல்ல போக்கு. இந்த போக்கை அதிகரிப்பதற்காக, ஒற்றை சிகரெட்டுகளின் விற்பனையை நிறுத்தும் விதிமுறைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

ஒற்றை சிகரெட்டுகளை விற்கும் நடைமுறையானது, வறியவர்களுக்கும் 12 தொடக்கம் 20 சிகரெட்டுகளைக் கொண்ட பக்கட்களை வாங்க முடியாத சிறார்களுக்கும் புகைபிடிப்பதை மிகவும் இலகுபடுத்துவதாக உலகெங்கிலும் உள்ள ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கல்வி நிறுவனங்களின் 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட்டுகளை விற்பனை செய்வதைத் தடைசெய்யும் மற்றொரு ஒழுங்குமுறையை அமல்படுத்தவும் நாங்கள் சிந்தித்துள்ளோம்” எனவும் சம்பத் டிசரம் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்