அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் காஸாவில் இயங்கி வந்த கட்டடம், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் நாசம்

🕔 May 15, 2021

காஸா பகுதியில் அல் ஜசீரா உள்ளிட்ட சர்வதேச ஊடக அலுவலகங்கங்கள் இயங்கி வந்த கட்டடமொன்று இன்று சனிக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் இடிந்துள்ளது.

11 மாடிகளைகக் கொண்ட அந்தக் கட்டடத்தில் அல் ஜசீரா அலுவலகமும், குடியிருப்புகளும் மற்றும் பிற அலுவலகங்களும் இருந்தன

‘அசோசியேட்டட் பிரஸ்’ (ஏ.பி) செய்திப் பணியகம் உள்ளிட்ட மேலும் பல செய்தி நிறுவனங்களும் இந்தக் கட்டடத்தில் இயங்கி வந்தன.

இந்த நிலையில், அல் ஜசீரா இந்தத் தாக்குதலைக் கண்டித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அதில்; இந்தக் குண்டுத் தாக்குதலை அனைத்து ஊடகங்களும் மனித உரிமை நிறுவனங்களும் இணைந்து கண்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, இஸ்ரேல் அரசாங்கம் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

‘காஸாவில் தனது அலுவகம் இஸ்ரேலிய ராணுவத்தால் குண்டுவீசி தாக்கி அழிக்கப்பட்டதை அல் ஜசீரா மிகக் கடுமையாக கண்டிக்கிறது. மேலும் செய்திகளை உலகுக்கு அறிவிப்பதற்கும், நிகழ்வுகளை தெரிவிப்பதற்கும், ஊடகவியலாளர்கள் தங்கள் கடமையை செய்வதைத் தடுப்பதற்கான ஒரு தெளிவான செயலாக இதைக் கருதுகிறது” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ‘ஜலா டவர்’ என்ற அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் ஜாவத் மெஹ்தியை தொலைபேசியில் தொடர்புகொண்ட இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரி; அந்தக் கட்டடத்தை தாக்கவிருப்பதாகவும், ஒரு மணி நேரத்தில் அதை காலி செய்துகொள்ளும்படியும் கூறியுள்ளார். இத்தகவலை ஜாவத் மெஹ்தி கூறியதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் தங்கள் கருவிகளை எடுத்துக்கொள்ள கூடுதலாக ஒரு பத்து நிமிடம் அவகாசம் தரும்படி ஜாவத் அந்த அதிகாரியிடம் கெஞ்சுவதை ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் பார்த்துள்ளது. ஆனால், மறுமுனையில் பேசிய அந்த அதிகாரி அதற்கு மறுத்துவிட்டார்.

இஸ்ரேலிய குண்டுவெடிப்பு திங்கள்கிழமை தொடங்கியதில் இருந்து காசாவில் 39 குழந்தைகள் மற்றும் 22 பெண்கள் உட்பட 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸாவிலிருந்து போராட்டக் குழுக்கள் ஏவிய ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலில் குறைந்தது 09 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்