டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் பரிந்துரைக்கப்படுவார்: ஐ.ம.சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

🕔 May 8, 2024

யானா கமகே – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்குப் பரிந்துரைக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தி இன்று (08) அறிவித்துள்ளது.

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு – முஜிபுர் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்தப் பரிந்துரை – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் மூலம் – நாடாளுமன்றுக்கு டயானா கமகே சென்றிருந்தார். எனவே அவர் வகித்த இடத்துக்கு, வேறு ஒரு நபரைப் பரிந்துரைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு உரிமை உள்ளது.

டயானா கமகே – பிரித்தானியப் பிரஜை என்பதனால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததையடுத்து, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

இது இவ்வாறிருக்க கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் பொருட்டு, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.

ஆனால், கொழும்பு மாநகர சபைத் தேர்தல் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எவையும் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஜிபுர் ரஹ்மான் ராஜிநாமா செய்தமையை அடுத்து, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு – விருப்பு வாக்கின் அடிப்படையில் அடுத்த இடத்திலிருந்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி – நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

தொடர்பான செய்தி: நாடாளுமன்ற உறுப்புரிமை இழந்தார் டயானா கமகே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்