ஆகாயத்தைப் பரிசளித்த, ஒரு பல்கலைக்கழகத்தின் கால்நூற்றாண்டுக் கதை

🕔 May 15, 2021

கலாநிதி. எம்.எம். பாஸில்

பெண்களுக்கு கல்வியறிவை வழங்கி, அதனூடாக அவர்களை வலுப்படுத்துவது என்பது தற்கால நவீன உலகின் வெற்றிகரமான பெண் வலுவூட்டல் செயற்பாடாகியுள்ளது. இந்நிலையில் இச்செயற்பாட்டினை கல்வி நிலையங்கள் குறிப்பாக பல்கலைக்கழகங்கள் திறம்பட செய்கின்றன. இந்த அடிப்படையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது தனது 25 ஆண்டுகால கல்விப் பயணத்தில் இத்தகு மகத்தான காரியத்தைச் செய்து முடிப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளது.

‘இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் பெண்கள் வலுவூட்டலும்’ என்ற தலைப்பின் கீழான கருத்தாடலை துவங்குவதற்கு முன்னர், பெண்களை வலுவூட்டும் செயற்பாட்டில் இலங்கையின் நிலைப்பாடு பற்றி ஆராய்வதும் அவசியப்படுகின்றது. 

பெண்களை வலுவூட்டும் செயற்பாட்டில் பிரதான விடயமாக அமைவது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வியுரிமை, சொத்துரிமை, அரசியல் உரிமைகள், சுகாதார வசதிகள் என பல்வேறு துறைகளிலும் சமத்துவத்தைப் பெற்றுக் கொடுத்து, பெண்களை பலம்மிக்கவர்களாக மாற்றுவதாகும் என்றால் மிகையாகாது. இதன் பிரகாரம், ஆண் – பெண் சமத்துவமானாது பெண் வலுவூட்டலில் தனி ஒரு இடத்தையே தனக்கென்று ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

ஆண் – பெண் சமத்துவம்

ஆண் – பெண் சமத்துவம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் ஞாபகமூட்டத்தக்க ஒரு கருத்தை ‘இந்த ஆகாயத்தில் பாதி பெண்களுக்கு உரித்துடையதாகும்’ என்ற சீனப் பழமொழி தருகிறது. இப்பொருள் பொதிந்த பழமொழி பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்ற கருத்தின் உறுதித்தன்மையை பறைசாற்றுகின்ற ஒன்றாக அமைந்துள்ளது.

என்னதான் பெண் வலுவூட்டல், ஆண் – பெண் சமத்துவம் என்பன போன்ற எண்ணக்கருக்கள் நிகழ்கால உலகின் பேசுபொருள்களாகத் திகழ்கின்ற போதிலும் பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்பன இன்றும் உலகின் பல பாகங்களில் கேள்விக்குறியாகவே உள்ளன. மனித சமூகம் கண்டுள்ள நாகரீகத்தின் வளர்ச்சி நவீனமயமாக்கலை உலக நாடுகளிடையே கொண்டு போய்ச் சேர்த்துள்ள நிலையிலும் சமத்துவமின்மையும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் இன்றுவரை ஓய்ந்த பாடில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகியுள்ளது.

இருப்பினும் தென்னாசிய நாடுகளிடையே பால்நிலை சமத்துவத்தில் இலங்கையானது ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையின் வரலாறு நெடுகிலும் பெண்கள் வலுவூட்டப்பட்ட சம்பவங்களை நாம் காணக் கூடியதாக உள்ளது. அந்தவகையில், 1931இல், இலங்கைப் பெண்கள் வாக்குரிமையைப் பெற்றுக் கொண்டனர். அரசியல் உரிமைகளில் தலையாய உரிமையான வாக்குரிமை இலங்கைப் பெண்களின் விடயத்தில் அபிவிருத்தியடைந்த நாட்டுப் பெண்களினையும் பார்க்க இலகுவாக கிடைக்கப்பெற்ற ஒன்றாகக் காணப்பட்டதோடு இது இலங்கைப் பெண்களை அரசியல் ரீதியாக வலுவூட்டிய குறிப்பிடத்தக்க சம்பவமாகவும் அமைந்தது.

1947இல் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக்கல்வி முறையானது கல்வியைப் பெற்றுக் கொள்வதிலும் அறிவுபூர்வமான வழிமுறைகளின் கீழ் பெண்கள் செயற்படுவதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இவ் இலவசக்கல்வி முறையின் கீழ் ஆண்களைப் போலவே பெண்களும் உள்ளீர்க்கப்பட்டமையால் இலங்கைப் பெண்கள் கல்வியியல் ரீதியில் வலுப்பெற்றனர். மேலும், சுகாதார வசதிகளையும் மருத்துவ வசதிகளையும் இலங்கைப் பெண்கள் பெற்றுக்கொள்வதற்கான சம சந்தர்ப்பமானது 1951ஆம் ஆண்டின் இலவச மருத்துவவசதி மூலம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான தொடர் நிகழ்வுகள் ஆண்களுக்கு சமாந்தரமான பாதையில் பெண்களையும் வலுப்படுத்தியிருந்தன. இதன் விளைவால் இலங்கைப் பெண்களின் எழுத்தறிவு வீதம் உயர்வடைந்தது; மரணவீதம் குறைவடைந்தது; பெண் சிசுக் கொலை குறைவடைந்தது மற்றும் கருக்கலைப்பு வீதம் குறைவடைந்தது.

இவ்வாறு இலங்கைப் பெண்கள் வலுவூட்டப்பட்டு வந்த காரணத்தினால்தான் இப்பெண்களிடமிருந்து பெறுமதிமிக்க வெளிப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அதன்படி 1960 ஜுலை 21இல் உலக வரலாற்றிலும் இலங்கை வரலாற்றிலும் முதலாவது பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மூன்று தடவை இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இவரது மகளான சந்திரிக்கா குமாரதுங்கவும் உலக வரலாற்றில் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட பெண் ஜனாதிபதியாகக் கடமை புரிந்தமையையும் முக்கியமான ஒரு விடயமாகப் பார்க்கலாம்.

இத்தகு சந்தர்ப்பங்களெல்லாம் பெண்களை வலுவூட்டுவதில் இலங்கை கண்ட பரிணாம வளர்ச்சிகளைச் சுட்டி நிற்கின்ற அதே சமயம், மேலும் பெண்களை வலுவூட்ட வேண்டிய தேவைப்பாடும் இலங்கைக்கு உண்டு.

இலங்கைப் பெண்களின் நிலை

மேற்கண்டவாறான அபிவிருத்திகள் பெண்களின் நிலையில் ஏற்பட்டிருக்கின்ற வேளையில், ஏன் இலங்கைப் பெண்கள் மென்மேலும் வலுவூட்டப்பட வேண்டும் என்று பார்ப்போமேயானால், இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52.1 சதவீதத்தினராகவும் மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர் வீதத்தில் 56 சதவீதத்தினராகவும் காணப்படுகின்ற பெண்கள் 2020ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரத்தின் பிரகாரம்; 5.3 சதவீதத்தினரே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

அதேபோல, இலங்கையின் ஊழியப்படையில் பெண்கள் பங்குபற்றுவதிலும் வளங்களைப் பயன்படுத்துவதிலும் பெண்களின் நிலை பின்தங்கியுள்ளது. அதாவது கடந்த ஒரு தசாப்த காலத்திலே பெண்களின் பொருளாதார பங்குபற்றுதல் 35 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. ஆண்களுக்கு சமமாகப் பெண்களுக்குத் திறமை காணப்பட்ட போதிலும் கூட – தொழில் பிரிப்பில் பாரபட்சம் காட்டப்படுகின்றது. குறிப்பாக வேதனம் கூட சமத்துவமாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.

இது தவிர உழைக்கின்ற பெண்கள் செலவிடுகிற போது அந்த செலவிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது.  மேலும், மரபுரிமைச் சட்ட இணைப்பின் பிரகாரம், காணி உரிமையில் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. சொத்துப் பிரிப்புக்களில் ஆண்களுக்கு கூடுதலான வாய்ப்பு காணப்படுவதாகவும் ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. அதேநேரம் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது வடபுலப் பெண்களின் காணி, சொத்துரிமைகளிலே மிக மோசமான பாதிப்புக்களை உருவாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

முப்பது வருட கால உள்நாட்டுப் போர், பெண்களின் விடயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பாலியல் வன்முறைகள், வலது குறைந்த பெண்களின் உருவாக்கம், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் எழுச்சி, நுண் கடன்களில் சிக்கித் தவிக்கின்ற நிலை ஆகியன உள்நாட்டுப் போரினால் பெண்களுக்கு ஏற்பட்ட விளைவுகளாகும். இவ்வாறான காரணங்களால் இலங்கைப் பெண்கள் பலவீனமடைந்தனர். அவர்களின் அபிவிருத்தி முடக்கப்பட்டது. அதனால் பெண்கள் வலுவூட்டப்பட வேண்டும் என்ற தேவைப்பாட்டிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

பெண்களை வலுவூட்டுவதில் உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் சில மேம்பாடுகள் அவசியப்படுகின்றன என்பதனை தரவுகள் சுட்டிக்காட்டி நிற்கின்ற சூழ்நிலையில்தான், பெண்களை வலுவூட்டுவதில் பல்கலைக்கழகங்களும் முக்கிய பங்களிப்புக்களை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் இலங்கையின் அங்கீகாரம் பெற்ற பதினைந்து பல்கலைக்கழகங்களிடையே பெண்களை வலுவூட்டுவதில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தனியொரு சிறப்பிடம் உண்டு என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகக் காணப்படுகின்றது.

உலகிலே குறிப்பாக மேற்கு நாடுகளில் அதிகரித்து வருகின்ற பெண் கல்வியின் தாக்கத்தை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலே காண்பது நிகழ்கால உலகின் நிதர்சனமாகும்.

தெ.கி.பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு

கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு மோதலின் விளைவால் மக்கள் பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டிருந்தது. இதில் புலம்பெயர்வு என்பது ஒரு முக்கிய பிரச்சினையாகக் காணப்பட்டது. இவ்வாறு புலம்பெயர்ந்த பெண்கள் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் கஷ்டங்களை அனுபவித்திருந்த வேளையில், நிறைவேற்று ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சியின் கீழ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹூம்எம். எச். எம். அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்டதே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும்.

இப்பல்கலைக்கழகத்தின் உருவாக்கம் ஆண் – பெண் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பட்டதனால் இப்பல்கலைக்கழகம் பால்நிலை சமத்துவத்தின் வெளிப்பாடாக அமைகின்றது.  பால்நிலை சமத்துவத்தின் வெளிப்பாடாகக் காணப்படுகின்ற இப்பல்கலைக்கழகம் – பெண்களை வலுவூட்டுவதிலும் சமத்துவத்தைப் பேணுவதிலும் முன்னேற்றம் கண்டுள்ளது.

அஷ்ரப்பின் பெரும் முயற்சியுடனும் பல்வேறுபட்ட நபர்களது பங்களிப்புடனும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. கிழக்கு முஸ்லிம்கள் மாத்திரமல்லாது இலங்கையின் அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய ஒரு தேசிய பல்கலைக்கழகமாக இன்று மிளிர்கின்றமை அஷ்ரப்பின் தூரநோக்குகளில் ஒன்றின் அடைவை எடுத்துரைக்கின்றது.

இப்பல்கலைக்கழகத்தினூடாக சமூகத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும் என அஷ்ரப் கனவு கண்டார். முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி, தொழில்வாய்ப்பு போன்ற விடயங்களை எவ்வாறு தூரநோக்கோடு சிந்தித்தாரோ, அதேபோன்று பெண்களின் கல்வி வளர்ச்சியிலும் கரிசனை கொண்டிருந்தார்.

போர்க்கால சூழலில் ஆண்கள் கல்வி கற்பதுவே சிரமமானதாக இருந்தது. பெண்களைப் பொறுத்தவரை குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு உயர் கல்வி என்பது பெரும்பாலும் எட்டாக் கனியாகவே காணப்பட்டது. இந்நிலைமையை அஷ்ரப் தனது எண்ணத்தில் உள்வாங்கியிருந்தார். அதன் விளைவாக இப்பெண்களை கல்வியியல் ரீதியாக வலுவூட்ட வேண்டுமென்ற உறுதிப்பாட்டைக் கொண்டிருந்தார். பெண்களுக்கு உயர்கல்வியை அளிப்பதன் மூலமே அச்சமூகத்தில் மறுமலர்ச்சியை எதிர்பார்த்தார். அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுள் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கம் குறிப்பிட்டுக் கூறக்கூடியதாகும்.

இப்பல்கலைக்கழகத்தினூடாக பெண்களை வலுவூட்டும் செயற்பாட்டை அஷ்ரப் ஆரம்பித்து வைத்தார். இன்றைய சூழலில் அதன் விளைவுகள் எமது கண்முன்னே நிதர்சனமாகியுள்ளன.

1995இல் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருந்த வேளையில் 1992/93, 1993/94 மற்றும் 1994/95 கல்வியாண்டு மாணவர்களை மாத்திரமே கொண்டிருந்தது. இதனால் அதன் ஆரம்ப கட்டத்தில் மொத்த மாணவர் தொகையில் பெண்களை விட ஆண்களே அதிகமாகக் காணப்பட்டனர். பின்னர் ஏற்பட்ட சமூக மாற்றமும் பெண்கள் கல்வியைப் பெற்றுக் கொள்ளவென கொண்டிருந்த தாகமும் இந்நிலையை தலைகீழாக மாற்றியது. மாணவர்களின் நிலைப்பாட்டில் மட்டுமன்றி கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் நிலைப்பாட்டிலும் மாற்றமேற்பட்டு பால்நிலை சமத்துவம் பேணப்பட்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது.

இம்மாற்றத்தை அல்லது இம்முன்னேற்றத்தை பல்வேறு தரவுகளினூடாக அவதானிக்கலாம். பல்கலைக்கழகத்தின் உள்ளக மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்கின்ற போது பெண் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. தற்போது இப்பல்கலைக்கழகத்தில் 5561ஆகக் காணப்படும் மொத்த மாணவர் தெகையில் 3834 பேர் பெண் மாணவர்களாக உள்ளனர். அத்தோடு இப்பல்கலைக்கழகத்தில்காணப்படுகின்ற ஆறு பீடங்களினதும் மொத்த மாணவர் தொகையில் 69 சதவீதமானவர்கள் பெண் மாணவர்களாகக் காணப்படுகின்றனர்.

இவ் எண்ணிக்கை அதிகரிப்பினூடாக பெண் மாணவர்கள் உயர்கல்வியில் முன்னேற்றத்தை எட்டியிருந்தபோதும் மரபு ரீதியாக கல்விசாரா பிரத்தியேக செயற்பாடுகளில் ஆண்களே முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழகத்தின் ஆரம்ப காலங்களில் இப்பிரத்தியேக செயற்பாடுகளில் குறிப்பிட்டளவான பெண் மாணவர்கள் ஈடுபட்டபோதும் முஸ்லிம் பெண் மாணவர்களின் ஆர்வம் குறைவாகவே காணப்பட்டது. எனினும் படிப்படியாக இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் உட்பட அனைத்து இன பெண் மாணவர்களும் கல்வி மற்றும் கல்விசாரா செயற்பாடுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண் மாணவர்களின் அடைவுகளும் அவர்கள் பெற்றுக்கொண்ட விருதுகளும் இதற்கு சான்று பகர்கின்றன. பெண்களை வலுவூட்ட வேண்டுமென்ற அஷ்ரப்பின் கனவுகளின் ஒரு பகுதியாகவே இதனை பார்க்க முடியும்.

பெண் மாணவர்களின் வலுவூட்டலில் ஏற்பட்டுள்ள மேற்கூறிய அடைவுகளைப் போன்றே பல்கலைக்கழகத்தின் முக்கிய சில பதவிகளிலும் பெண் ஊழியர்களுக்கான வலுவூட்டல் இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில் நோக்கினால் இப்பல்கலைக்கழகத்தில் பதவிவகிக்கின்ற பெண்கள் – உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் அளவுக்கு தகுதி பெற்றுள்ளனர். இது இப்பெண்களிடையேயான ஆளுமை விருத்தியை வெளிப்படுத்துகின்றது.

மேலும், இங்கு பணிபுரிகின்ற பெண் ஊழியர்களில் பலர் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளதுடன் பேராசிரியர்களாகவும் நியமனம் பெற்றுள்ளனர். இப்பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியராக திருமதி. ஹன்சியா நியமனம் பெற்றார். பெண்கள் பல முக்கிய பதவிகளில் இடம்பெறுமளவுக்கான வலுவூட்டலை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது என்பதனை புலப்படுத்துகின்ற சான்றாதாரமாகக் இந்நிலையைக் கொள்ளலாம்.

சாதனைப் பெண்கள்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினது மேலும் சில புள்ளிவிபரங்களின் படி, கடந்த காலத்தில் பீடங்களின் பீடாதிபதிகளாக  திருமதி. சந்தானம், பேராசிரியர். ஹன்சியா, கலாநிதி. சபீனா, திருமதி. சரீனா ஆகியோர் காணப்பட்டனர். தற்போது துறைத் தலைவர் பதவியிலே கலாநிதி. சபீனா, கலாநிதி. சாதியா, கலாநிதி. அநுஷியா, திருமதி. சாதிபா, திருமதி. அதிகாரம், திருமதி. சுஜாராணி ஆகியோர் காணப்படுகின்றனர். இது இப்பல்கலைக்கழகப் பெண்களுக்குள்ள தலைமைத்துவ ஆற்றலை சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் இப்பல்கலைக்கழகத்தின் உயர் நிர்வாகிகளாகப் பணிபுரியும் 32 பேரில் 6 பேர் பெண் நிர்வாகிகளாக உள்ளனர்.

இப்பல்கலைக்கழகத்தின் மொத்த கல்விசார் ஊழியர்கள் அதாவது விரிவுரையாளர்கள் தொகையான 211 பேரில் 66 பேர் பெண் விரிவுரையாளர்களாவர். இப்பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 115 உதவி விரிவுரையாளர்களிடையே 70 பேர் பெண்களாவர்.

இதுதவிர, கல்விசாரா ஊழியர்கள் 422 பேரில் 74  பேர் பெண்களாவார்கள், 101 பேர் பணிபுரியும் Work Aid இலும் 19 பேர் பெண்களாவர்.

இவ்வாறு இப்பல்கலைக்கழகத்தின் உள்ளக மட்டங்களில் மட்டுமன்றி, வெளியிலும் இலங்கை தென்கிழக்குப் பல்ழைக்கழகத்தின் உள்வாரி மற்றும் வெளிவாரி பெண் பட்டதாரிகள் நாட்டின் உயர் பதவிகள் பலவற்றில் பணியாற்றி வருகின்றமையும் சிறப்புக்குரியதாகும். அந்தவகையில், இப்பல்கலைக்கழகத்தின் பெண் பட்டதாரிகள் இலங்கை திட்டமிடல் சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர், இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் என்பவற்றில் விரிவுரையாளர்கள், ஐக்கிய நாடுகள் தாபனத்தின் இலங்கைக் கிளையில் உத்தியோகத்தர், அரசு சாரா நிறுவனங்களின் உயர் உத்தியோகத்தர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் போன்ற உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் இலங்கை முழுவதும் இப்பல்கலைக்கழக பெண் பட்டதாரிகள் ஆசிரியர்களாக, சமூக சேவை உத்தியோகத்தர்களாக, அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக, சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக, தொழில்நுட்பக் கல்லூரி உத்தியோகத்தர்களாக, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை உத்தியோகத்தர்களாக பதவி வகித்தும் வருகின்றனர்.

உள்வாரி பெண் பட்டதாரிகளைப் போன்று வெளிவாரிப் பெண் பட்டதாரிகளும் தமது ஆளுமையை வெளிப்படுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. அதன்படி, இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலே வெளிவாரிப் பட்டப்படிப்பை நிறைவுசெய்த பெண் பட்டதாரி அதே பல்கலைக்கழகத்திலேயே சிரேஷ்ட உதவிப்பதிவாளர் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு இப்பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா பெண் ஊழியர்களும் இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் பட்டதாரிகளும் நாட்டின் பல்வேறு துறைகளிலும் உள்வாங்கப்பட்டு, பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை ‘பெண்கள் கல்வியியல் ரீதியிலும் தலைமைத்துவ ரீதியிலும் வலுவூட்டப்பட்டுள்ளனர்’ என்பதனைக் காட்டி நிற்கின்றது. இது தவிர, இவ்வலுவூட்டலானது பெண்களிடையே ஆளுமை விருத்தியையும் தலைமைத்துவப் பண்பின் மேம்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளதுடன் பெண்களை வலுவானவர்களாக மாற்றுவதிலும் பாரிய பிரயத்தனத்தை மேற்கொண்டுள்ளது என்றே கூற வேண்டும்.

இது இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது பெண்களை வலுவூட்டுவதில் பாரியதொரு வகிபாகத்தைக் கொண்டுள்ளது என்பதனை வெளிப்படுத்தி நிற்கின்றது. மேலும் இந்நிலை இலங்கையில் பெண்கள் கல்வியியல் ரீதியாக கண்டுள்ள வலுவூட்டலை சுட்டிநிற்கின்ற அதேவேளை, இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரான எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் தூரநோக்குடைய கனவையும் நனவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.  

(இந்தக் கட்டுரையாளர் கலாநிதி எம்.எம். பாஸில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறைத் தலைவராகப் பதவி வகிக்கின்றார்)   

Comments