அட்டாளைச்சேனையில் மரங்களைப் பிடுங்கி நிந்தவூருக்குக் கொண்டு செல்ல முயன்ற கும்பல் அகப்பட்டது: பொலிஸாரின் தலையீட்டுடன், இருந்த இடத்தில் நடப்பட்டது மரம்

🕔 April 11, 2021
பிடுங்கியெடுத்து வாகனத்தில் ஏற்றத் தயாராக இருந்த மரம்

– அஹமட் –

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மரங்களை சட்ட விரோதமாக பிடுங்கியெடுத்து, வேறு பிரதேசமொன்றுக்குக் கொண்டு செல்வதற்கு சிலர் எடுத்த நடவடிக்கை பொதுமக்களால், தடுத்து நிறுத்தப்பட்டதோடு, பிடுங்கப்பட்ட மரம் – இருந்த இடத்தில் மீண்டும் பிடுங்கியவர்களைக் கொண்டு நட்டு வைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பாவங்காய் வீதிக்கு அருகில் இருந்த மரங்களை இவ்வாறு பிடுங்கும் நோக்குடன் வந்தவர்கள், முதலாவது மரத்தை பிடுங்கிய போதே, மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நிந்தவூரிலிருந்து லொறி ஒன்றுடன் வந்தவர்களே இவ்வாறு மரங்களை சட்ட விரோதமாக பிடுங்கிக் கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இவர்கள் மரத்தைப் பிடுங்கி வாகனத்தில் ஏற்றுவதைக் கண்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியதோடு, அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் சுற்றால் பிரிவு பொலிஸாருக்கும் இவ்விடயம் தொடர்பில் அறிவித்தனர்.

இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் சம்பவ இடத்துக்கு சமூகமளித்ததோடு, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளரும் அங்கு வருகை தந்தார்.

இதன்போது மரத்தை பிடுங்கியவர்கள் மற்றும் அவர்களை வழிநடத்தியோர் – தாம் செய்த தவறை மன்னிக்கும்படி அங்கிருந்த பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியமையினை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடுவதெனமும், சம்பந்தப்பட்டோர் பொலிஸ் நிலையத்தில் மன்னிப்புக் கோருவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மரத்தைப் பிடுங்கியோர், அந்த மரத்தை உரிய இடத்தில் மீண்டும் நட்டுத் தரவேண்டும் என்கிற மக்களின் கோரிக்கையை அடுத்து, மரம் மீண்டும்- இரந்த இடத்தில் நடப்பட்டது.

பல்லாண்டுகள் வளர்ந்த – நிழல் தரும் பெரிய மரங்கள் பலவற்றை சட்ட விரோதமாகப் பிடுங்கி எடுத்துச் செல்வதற்கு மேற்படி நபர்கள் எடுத்த முயற்சி, ஆரம்ப கட்டத்திலேயே பொதுமக்களால் தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் தலையீடுகள் உள்ளதாகவும் பேசப்படுகிறது.

பிடுங்கியவர்களே மரத்தை மீண்டும் நடுவதற்கு முயற்சிக்கின்றனர்…
இருந்த இடத்தில் மரம் நடப்படுகிறது..
பிடுங்கப்பட்ட மரம் மீண்டும் அதே இடத்தில் நடப்பட்டது

Comments