அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது; சஹ்ரானின் சகோதரருக்கு உதவியவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

🕔 March 21, 2021

ஹ்ரான் காசிமுடைய சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு உதவியளித்ததாகக் கூறப்படும் ஒருவரும், அடிப்படைவாதத்தை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

மாவனெல்லையில் நேற்று கைதுசெய்யப்பட்ட 44 வயதுடைய மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி, ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் என பொலிஸ் பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இலங்கை வந்த அவர், மாவனெல்லை பகுதியில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொடர்பில், பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜமாத்தே இஸ்லாம் கொள்கையை பின்பற்றும் அவர், பல்வேறு அடிப்படைவாத கருத்துக்களை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர் பயன்படுத்திய மடிக்கணினி ஒன்றும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்த சந்தர்ப்பத்தில், ஏதோவொரு வகையில் பல்வேறு அடிப்படைவாத கருத்துக்களின் மூலம் பணம் சேகரித்திருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபரை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சஹ்ரானுடைய சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு உதவியளித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர், மட்டக்களப்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விசாரணைகளின் பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிந்தார்.

இந்த நிலையில், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க அந்தப் பிரிவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

அடிப்படைவாத கருத்துக்களைக் கொண்டதாகக் கூறப்படும் குறித்த நபரினால், பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான், சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியானார்.

எனினும், கடந்த 2018 ஆம் ஆண்டு, குண்டுகளை பரிசோதித்து பார்த்த சந்தர்ப்பத்தில் அவர் காயமடைந்திருந்தார்.

இதையடுத்து, அவரை ரகசியமான முறையில் கொழும்புக்கு அழைத்துவந்து, சிகிச்சை வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுடன் காத்தான்குடியை சேர்ந்த நபருக்கு தொடர்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதற்கமையவே, பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அவர் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

குறித்த இருவரிடமும், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்